உறியடி 2 விமர்சனம்

உறியடி படத்தில் ஜாதிய பிரச்சனையை கையிலெடுத்து கவனிக்கப்படத்தக்க படைப்பாளியாக தமிழ்திரையுலகுக்கு வந்த நடிகரும் இயக்குநருமான விஜய்குமாரின் அடுத்த அசத்தல் படைப்பாக வெளிவந்திருக்கிறது உறியடி 2.

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளித்துவத்தையும் அதற்கு காவடி தூக்கும் அரசியல்வாதிகளையும் எப்படி குறிவைத்து அடிக்கிறார் என்பதே இந்த படத்தின் கரு.

செங்கதிர்மலை என்ற களத்து மேட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக நச்சுக்காடாக மாற்றுகிறது ஒரு பூச்சிக் கொல்லி ஆலை. முதலாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு காட்டிக்கொடுக்கிறார்கள் ஒரு சாதிக்கட்சித் தலைவரும் ஆளுங்கட்சி பிரமுகரும். விஷவாயு காற்றோடு கலந்து ஊரே சுடுகாடாகிறது. இதற்குக் காரணமானவர்களைத் தேடித் தேடி அழிக்கிறார்கள் ஹீரோவும் அவர் நண்பர்களும்!

நடிகர், இயக்குநர் என்ற இரட்டைச் சவாரி. இரண்டிலும் வெற்றிகரமாகப் பயணிக்கிறார் விஜய்குமார். முதல் பாகத்தைவிட இதில் இரண்டிலுமே முதிர்ச்சி தெரிகிறது. நாயகி விஸ்மயா நடிக்கக் கிடைத்த கொஞ்சமே கொஞ்சம் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார். ‘பரிதாபங்கள்’ சுதாகர் அந்த அப்பிராணி கேரக்டருக்கு பக்கா பொருத்தம். ஜாதிக்கட்சித் தலைவராக வரும் சங்கர், தொழிலதிபராக வரும் துரை ரமேஷ் ஆகியோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களை இதற்கு முன்னால் வந்த படங்களில் நிறையவே பார்த்திருந்தாலும் சில காட்சியமைப்புகள் ரொம்பவே புதிது. குறிப்பாக இடைவேளை முன்னாலும் பின்னாலும் வரும் காட்சிகள் திக் திக் அனுபவம். ஆலைகள் ஆபத்தானவை என இதற்கு முன்னால் வந்த ஹீரோயிச படங்கள் வார்த்தை களில் சொல்லிச் சென்றதை உருக்கமாகக் காட்சிப்படுத்திய வகையில் தனித்து நிற்கிறார் விஜய்குமார். மனதைப் பிழியும் அந்தக் காட்சிகளில் போபால் மண்ணில் புதைந்துபோன குழந்தையின் முகமும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ரத்தம் சிந்திய 13 பேரும் நினைவுக்கு வருகிறார்கள்.

‘ஏதோ நடக்கப்போகிறது’ என்ற பதற்றத்தையும் நடந்தபின்னான விளைவுகளின் பயங்கரத்தையும் நமக்குக் கடத்துவதில் வெற்றிபெற்றிருக்கிறார் விஜய்குமார். அவருக்கு பக்கபலமாக ஒளிப்பதிவாளர் பிரவீன் குமாரும் எடிட்டர் லின்னுவும். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்துவும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். ‘நீங்க லாபம் பாக்குறதுக்கான வரி, எங்க உயிரா?’ என ஆங்காங்கே வரும் வசனங்கள் கைதட்டல்கள் பெறுகின்றன.

படம் பேசும் விஷயம் மிக முக்கியமான நிஜ வாழ்க்கை தொடர்பான பிரச்சனையைத் தாக்கம் ஏற்படுத்தும்படி படமெடுத்த இயக்குநர் விஜயகுமாருக்கும் சமரசம் செய்து கொள்ளாமல் இதைத் தயாரித்த தயாரிப்பாளர் சூர்யாவுக்கும் வாழ்த்துகள்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *