கர்நாடகாவுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு- மேகேதாட்டு அணை விரைவில் கட்டப்படும்: பணிகளை தொடங்கப்போவதாக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு


மேகேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. எனவே மத்திய அரசு அனுமதி அளித் ததும் விரைவில் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு தமிழக அரசும் விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது’ என வலியுறுத்தினார். இதற்கு கன்னட அமைப்புகளும் கர்நாடக விவசாய சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேகேதாட்டு திட்டமானது கர்நாடகா வின் மிக முக்கியமான திட்டமாகும். அதனை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்ட அமர்வு மேகேதாட்டுவில் ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்து, அங்கு அனுப்ப உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வு முன்னிலையில் மனு தாக்கல் செய்தோம். கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்று, மேகேதாட்டுவில் ஆய்வு செய்வதற்கும், தென்மண்டல தீர்ப்பாயம் தொடர்ந்து விசாரிக்கவும் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இது கர்நாடகாவுக்கு கிடைத்த வெற்றியாகும்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பின் மூலம் கர்நாடக அரசு மேகேதாட்டு வில் புதிய அணை கட்டுவதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு அனுமதி அளித்த உடன் விரைவில் மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். அதன் மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். பெங்களூருவின் குடிநீர் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறும்போது,”கர்நாடக அரசு மேகேதாட்டுவில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல் படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் முடித்து வைத் துள்ளது. இதன் மூலம் கர்நாடக அரசு எவ்வித விதிமுறை மீறலிலும் ஈடுபடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு கர்நாடகாவுக்கு சாதகமாக வந்துள்ளதால் மத்திய அரசும் கர்நாடகாவின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றும்”என்றார்.
முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறிய தாவது:
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கர்நாடகாவின் நலன்களுக்கு எதிரானது. கர்நாடக ஆளும் கட்சியில் நிலவும் உட் கட்சி பூசலால் நிலம், நீர், மொழி ஆகிய வற்றை பாதுகாக்க முடியாமல் எடி யூரப்பா திணறுகிறார். மத்தியிலும் மாநிலத் திலும் பாஜக ஆட்சி இருந்தபோதும் எடியூரப்பாவால் மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி பெற முடியவில்லை. அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார். இந்த விஷயத்தில் நான் அவரோடு கைகோக்க தயாராக இருக்கிறேன்.
அதே வேளையில் காவிரி பிரச்சினை யில் கர்நாடகாவும் தமிழகமும் மோதிக் கொள்வதால் எவ்வித பயனும் இல்லை. தென்னிந்திய மாநிலங்கள் என்ற அடிப்படையில் மோதலை கைவிட்டு, சகோதரத்துவத்தின் அடிப்படையில் காவிரி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியில் தொடங்கினால் அதற்கு என் முழு ஆதரவு உண்டு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எள்முனை அளவும் இடம் தரக்கூடாது: தமிழக அரசை பழனிசாமி வலியுறுத்தல்
மேகேதாட்டு அணை கட்டுமானம் குறித்த கர்நாடகாவின் அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
உச்ச நீதிமன்றம் 2018 பிப். 16-ம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீர் வழங்க வேண்டும். இந்த தீர்ப்பை செயல்படுத்த தமிழக அரசு அதே ஆண்டு நவ. 30-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. மேலும் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது என்று ஜல்சக்தி அமைச்சகத்தை அறிவுறுத்துமாறு பிரதமரை கேட்டுக் கொண்டேன்.
உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி அணை கட்ட கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரியதை அடுத்து, 2018 டிச. 5-ம் தேதி தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதல்வரின் ஒருதலைப்பட்சமான அறிவிப்பை கடுமையாக கண்டிக்கிறேன்.
கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து தமிழகத்துக்கு காவிரி நீரை முழுமையாக பெறவும் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்குக்கு எள்முனை அளவும் இடம் தராமல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *