குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு எதிர்ப்பை காட்டினால் கைதா…?

குடியுரிமை சட்டத் திருத்தம் (CAA), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR)  மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NCR) ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு வழிமுறைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் மத்திய அரசின் மேற்கண்ட சட்ட நடவடிக்கைகளை கண்டித்து சில பெண்கள் புதிய முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அவர்கள் செய்த புதுமை  என்னவென்றால், கோலம் வரைந்து அதில் தங்களது எதிர்ப்பைக் காட்டியதுதான். கோலத்தில் NO CAA, NO NRC, NO NPR என்று எழுதப்பட்டிருந்தது.  காயத்ரி, ஆர்த்தி, கல்யாணி, பிரகதி மற்றும் மதன் என கோலம் வரைந்த ஐந்து பேரும், அவர்களுக்கு ஆதரவாக நின்ற இரண்டு வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜெ5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள சமூதாயக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த ஏழு பேரையும் கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

NO CAA, NO NRC, NO NPR  என்று கோலம் போட்டு எதிர்ப்பை பதிவிட்டு  புதிய முறையில் போராட்டம்  செய்த பெசன்ட் நகர் மக்களின் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி டிரண்டாகி வருகிறது. மேலும் இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த போராட்டத்திற்கு தங்களது ஆதரவையும், காவல்துறையின் நடவடிக்கைக்கு தங்களது கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கண்டனத்தில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகல் 19(1) (a) குடிமக்கள் தங்களது கருத்துகளை பேசுவதற்கும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. ஜனநாயக ரீதியாக தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திய மாணவிகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்ததை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்”. என்று தெரிவித்துள்ளார்.

நீதியரசர் ஹரிபரந்தாமனும் கோலத்தின் எதிர்ப்பை பதிவு செய்ததற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். “கோலம் போட்டு எதிர்ப்பை தெரிவிப்பது அற வழியிலான கருத்துரிமை. நாளை தமிழகம் முழுவதும் இம்மாதிரி கோலங்கள் போட்டால் அவர்கள் அனைவரையும் தமிழ்நாடு காவல்துறை கைது செய்யுமா..? இந்த புதிய போராட்ட உத்தியை அறிமுகப்படுத்திய பெசன்ட் நகர் போராளிகளுக்கு வாழ்த்துகள்”. என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கோலத்தின் மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *