தேவராட்டம் – ஆணாதிக்க சாதிவெறியாட்டம்…?

இயக்குனர் முத்தையா என்னவிதமான பண்பாட்டை பின்னணியாக கொண்டு படம் எடுப்பார் என்பது தெரிந்த விஷயம் தான் எனினும் தேவராட்டம் குறித்து வரும் விமர்சனங்கள் நன்றாகவே தெளிவுபடுத்துகின்றன.
தன்னுடைய பேட்டியில் வணிகரீதியான தேவை தான் வாழ்ந்த சூழலை பின்னணியாக கொண்டு இயக்குகிறேன் என்று முத்தையா விளக்கம் கொடுக்கிறார். இதுவே ஒரு சப்பைக்கட்டு…. சரி போகட்டும் ஆனால் தன்னை சாதி பற்று அற்றவன் என்று சொல்லிக்கொள்ளும் போது தன் பண்பாட்டை பதிவு செய்கிறேன் என்னும்போது ஆண்ட பெருமை, வீர மரபு, தொட்டா வெட்டுவேன் என்பதெல்லாம் எந்த கணக்கில் வருகிறது?

இப்படித்தான் ஒவ்வொரு குழுவும் தன் ‘இன’ மானம் என்கிற பெயரில் சாதிப் பெருமை பேசி திரிகிறது… அந்த போக்கில் மற்றொரு பிரிவினரை கெட்டவர்களாக பிறப்பின் அடிப்படையில் சித்தரிப்பது… இதற்குப் பெயர் பண்பாட்டு பதிவா?

குட்டிப் புலி தொடங்கி தாய்மை, பெண்மை என்பதில் ஆணாதிக்க பார்வையில் தான் பெண்களை இவர் சித்தரிக்கிறார். (பெரும்பாலான இயக்குனர்களும்) இப்போது சட்டை பேண்ட் போட்டுக்கொண்டு மயக்குகிரார்கள்… பொன்னை தொட்டவனை வெட்டு போன்ற வசனங்கள் எவ்வளவு வன்மம் நிறைந்தது…. (படத்தை வேறு பார்க்க வேண்டுமா என்ன)
இப்படித்தான் சிலர் இந்திய தேசியம் என்கிற பெயரில் இஸ்லாமிய வெறுப்பை பேசுகிறார்கள்…. கேட்டால் எங்கள் நாடு எங்கள் பண்பாடு….

அவர் மட்டும் பேசுறதில்லையா என்று மறைமுகமாக இரஞ்சித்தை சாதிய படம் எடுப்பவராக பேசுகிறார் முத்தையா…. ஒடுக்கப்படுவோர் தம் நிலையை பதிவு செய்வதற்கும் ஆதிக்கப் பிரிவினர் தன் பண்பாட்டை பெருமை பேசுவதற்கும்… அவர்களை வெட்டு குத்து என்று கெட்டவர்கள் என்னும் பெயரில் குறிப்பிட்ட சாதியினர் மீது வெறுப்பை வளர்ப்பதற்கும் வேறுபாடு கூட தெரியாதவர்கள் உண்மையில் கலைத்துறையை பீடித்திருக்கும் நோய்.

பெண்களை காப்பதே, குலப் பெருமை (உண்மையில் அது சாதி), ஆண்மை என்று கூப்பாடு போடுவது ஆணாதிக்க சாதிய வெறி. முத்தையாவிற்கு இரண்டு நோய்களும் பீடித்து இருக்கிறது…

இப்படி பெண்களை கேவலப்படுத்துபவனை, சாதிய வன்மத்தை கொட்டுபவனை என்ன செய்யலாம்…. ஓர் அறைக்குள் அடைத்து வைத்து பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் தொடங்கி அனைவரையும் படிக்கச் செய்தாலாவது திருந்துவார்களா…?

– கொற்றவை

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *