கோமதி மாரிமுத்து – தமிழகத்தின் தங்கமங்கை
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில் திங்கட்கிழமை (23-04-2019) நடந்த 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட தமிழகத்தின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். பந்தய தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்திருக்கிறார்.
இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இதுவாகும்.
தற்போது பாரட்டு, பரிசு மழையில் நனைந்து வரும் தங்கமங்கை கோமதியின் வாழ்க்கை பயணம் எத்தனை கடினமானது என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு கனவு இருக்கும். அந்த கனவை அடைய எத்தகைய இடர்பாடு வந்தாலும் நம் இலக்கு அந்த கனவை அடைவது மட்டுமே. அப்படி தன் வாழ்வில் பல இன்னல்களை சந்தித்த போதும் விடாமுயற்சியால் தன் கனவை அடைந்தவர் இந்த வீரமங்கை கோமதி மாரிமுத்து.
திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக கிடைக்காத மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்தவர் கோமதி. முக்கியமாக அந்த கிராமத்தில் ஒரு விளையாட்டு மைதானம் கூட கிடையாது. பேருந்து வசதிகளும் குறைவே. இதனால் தன் வீட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மைதானத்திற்கு தினமும் சென்று பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதிகாலை 3 மணிக்கு எழும் கோமதியை அவரது தந்தை மாரிமுத்து சைக்கிளில் மைதானத்திற்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். ஒரு
மகன், 3 மகள்களுடன் அவரது குடும்பம் வறுமையில் வாடிய போதும் மாரிமுத்து – ராசாத்தி தம்பதியினர் தங்களது கடைசி மகளான கோமதியின் தடகள பயிற்சிக்கு ஊக்கமளித்து வந்துள்ளனர். இதனால் 2013-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் கோமதி பங்கேற்று வந்தார்.
திருச்சி புனித சிலுவை கல்லூரியில் இளநிலை வணிகவியல் படித்துள்ள கோமதி சிறுவயது முதலே தடகளத்தின் மீது தீராத காதல் கொண்டுள்ளார். தன் கல்லூரி காலம் வரை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை வென்று குவித்துள்ளார். இவரின் திறமையை தொடர்ந்து அவரின் பெற்றோர் ஊக்குவித்து வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கோமதியின் தந்தை மாரிமுத்து புற்றுநோயால் மரணமடைந்தார். அடுத்து சில மாதங்களில் கோமதிக்கு பயிற்சி அளித்து பக்கபலமாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஆனால் கோமதி சோர்வடையவில்லை. 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 800 மீட்டர் தடகள போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் கோமதி. தன் விடா முயற்சியால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் தற்போது பெங்களூரு வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார். கோமதி ஏற்கனவே 2013-ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 7-வது இடத்தையும் 2015-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 4-வது இடத்தையும் பிடித்தார்.
கோமதி மாரிமுத்துவின் தாய் “என் மகள் வென்றதே எனக்கு தெரியாது. நான் வேலை செய்து கொண்டிருந்த போது எனது உறவினர்களின் குழந்தைகள் ‘என்ன அத்தை, டிவி பார்க்கலாமா? கோமதி ஓடிச் ஜெயிச்சுட்டாங்க’னு சொன்னாங்க. எனக்கு டிவி எல்லாம் போட்டு பாரக்கத் தெரியாது” என செய்தியாளர்களிடம் அப்பாவிதனமாக கூறினார்.
ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத கிராமத்தில் இருந்து வந்த கோமதி விடாமுயற்சியால் தன் கனவை அடைந்துள்ளார்.