100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டோர் பணியாற்ற அனுமதியில்லை: கரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழக அரசு உத்தரவு

கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, 100 நாள் வேலை திட்டப்பணிகளில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கரோனா தொற்று காலத்திலும், மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கியது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மட்டுமே. வாரத்துக்கு ரூ.165 கோடி முதல் 180 கோடி வரை பயனாளிகளுக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு வழிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றி பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

குறிப்பாக, 55 வயதுக்கு மேற்பட்டவர்களை பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. சளி, காய்ச்சல், தும்மல் மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சினை உள்ளவர்கள், லேசான காய்ச்சல் உள்ளவர்கள், நீரிழிவு மற்றும் இதய நோய், நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு பணி வழங்க கூடாது.

பணியாளர்கள் சிறு சிறு குழுக்களாக, உரிய சமூக இடைவெளி விட்டு பணியாற்ற அனுமதிக்க வேண்டும். பணியிடங்களுக்கு ஒரேவாகனங்களில் அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் 2 மீட்டர் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதுடன், முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

அனைத்து பணியிடங்களிலும் சோப்பு மற்றும் கை கழுவுவதற்கான தண்ணீர் வைத்திருக்க வேண்டும். புகையிலை, வெற்றிலை போட்டு எச்சில் துப்ப அனுமதிக்கக் கூடாது. காய்ச்சல், சளி, இருமல் பிரச்சினை உள்ளவர்களை ஆரம்பசுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு அனுப்பி கரோனாபரிசோதனை செய்வதுடன், அவர்களுடன் தொடர்பு உடையவர்களைகண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒரு பணியாளர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரை தனிமைப்படுத்தி, சுகாதாரத் துறையிடம் தெரிவித்து சிகிச்சை அளிக்கவேண்டும். மேலும், அந்த பணியிடத்தில் உடன் இருந்தவர்களுக்கு பரிசோதனை நடத்த வேண்டும்.

அந்த இடத்தில் பணியை நிறுத்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *