17 மக்களை காவு வாங்கிய “தீண்டாமைச்சுவர்” – கிட்டுமா நியாயம்…?

கோவை மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு மேட்டுப்பாளையம் அருகில் உள்ள நடூர் ஏ.டி.காலனியில் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில்13 குழந்தைகளும் பெண்களும் உட்பட 17 பேர்கள் இறந்துள்ளது இன்று இந்திய அள்வில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக விசாரித்த போது அந்தச் சுவர் கோவையிலுள்ள “சக்கரவர்த்தி துகில் மாளிகை” எனும் ஜவுளிக் கடை வைத்துள்ளவர்களால் கட்டப்பட்டது எனத் தெரிய வருகிறது. அருகிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்வழியே போய் வருவதைத் தடுப்பதற்காக எழுப்பட்ட “தீண்டாமைச் சுவர்” என்றே கூறுகிறார்கள்.
அந்தச் சுவர் 22 அடி உயர்த்தில் 80 அடி நீளத்திற்குக் கட்டப்பட்டுள்ளது. முதலில் பாதி அளவு உயரத்தில்தான் இருந்ததாகவும், பின்னர் அதன் உயரம் உயர்த்தப்பட்டதாகவும் கூறுகிறார்கள். 22 அடி உயரம் என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பார்த்தால் அது ஒரு சிறைச்சாலைச் சுவர் அளவுக்கு உயரமாக இருந்திருக்கும். ஆக எந்த வகையிலும் அப்பகுதியில் இருந்த தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் அவ்வழியே போகக் கூடாது எனத் திட்டமிட்டுக் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
அந்தச் சுவர் முறைப்படி அனுமதி வாங்கிக் கட்டப்பட்டதா, உயரத்தை அதிகரிக்க அனுமதி வாங்கப்பட்டதா, உயரத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதைத் தாங்கும் அளவிற்கு அடித்தளம் முதலியன உள்ளதா என்பதை எல்லாம் கண்டறிந்து அனுமதி வழங்கப்பட்டதா என்பதெல்லாம் கேள்விகளாக எழுகின்றன.
இறந்தவர்கள் அத்தனை பேரும் தாழ்த்தப்பட்ட மக்கள். ஆனாலும் சுவருக்குச் சொந்தக் காரர்களின் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டங்கள் எதுவும் பதியப்பட்டதா எனத் தெரியவில்லை. இந்தக் கொடுமையை கண்டித்து இத்தனை பேரின் மரணத்திற்கும் காரணமாக இருந்தவர்கள் மீது நடிவடிக்கை எடுக்கவும் தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட பொதுமக்கள் மீது காவல்துறை கடுமையாக தாக்கியதோடு கைதும் செய்யப்பட்டனர்.
பிரச்சனை தீவிரமடைவதைக் கண்ட தமிழக அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்ச ரூபாய் அளிப்பதாக அறிவித்ததோடு தலைமறைவாக இருந்த “சக்கரவர்த்தி துகில் மாளிகை” உரிமையாளர் சிவசுப்பிரமணியம் சாதரண கொலை முயற்சி வழக்கில்(304-A) கைது செய்யப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இத்தனை அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த சிவசுப்பிரமணியத்தின் மீது SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் அத்தோடு 17 உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை அதிகப்படுத்த வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை பல்வேறு அரசியல் தலைவர்களும் வைத்துள்ளனர்.

ஜாதி இருக்கும் தேசத்தில் நீதிக்கு இடமில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வரும் வகையில்தான் இதுவரை சம்பவங்கள் நடந்தேறிவருகின்றன. அதுபோன்றே இந்த மரணங்களுக்கும் நடந்துவிடக்கூடாது என்பதே நம்மைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *