170 டன் மருந்து பொருட்கள் கூடுதலாக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

இந்தியாவுக்கு கூடுதலாக 170 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்கள், கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கரோனா வைரஸின் 2-ம் அலை தீவிரமாக உள்ளது. நாட்டில் நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் மருந்து மற்றும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகளை அனுப்பி வருகின்றன.

இதனிடையே இந்தியாவுக்கு கூடுதலாக 170 மெட்ரிக் டன்மருந்துகள், மருத்துவக் கருவிகளை அனுப்பியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பூனம் கேத்ரபால் சிங் கூறும்போது, “உலக சுகாதாரஅமைப்பைச் சேர்ந்த 2,600 நிபுணர்கள் இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ ஆக்சிஜன், மருத்துவக் கருவிகள், மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களை உலக சுகாதார அமைப்பு திரட்டி இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.

மேலும் நார்வே, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன” என்றார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *