சென்னை தீவுத்திடலில் நடந்துவரும் சுற்றுலா பொருட்காட்சிக்கு 22 நாட்களில் 4 லட்சம் பேர் வருகை
சென்னை தீவுத்திடலில் நடந்துவரும் சுற்றுல்லா பொருட்காட்சியை கடந்த 22 நாட்களில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி ஜன.4ம் தேதி தொடங்கியது. 70 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் 27 அரசுத்துறை அரங்குகள், 21 பொதுத்துறை நிறுவன அரங்குகள், மத்திய அரசின் 2 அரங்குகள், பிற மாநில அரசின் 3 அரங்குகள் என 53 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அரங்குகளில் முதல்வரின் காலை உணவு திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், இன்னுயிர் காப்போம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இதுதவிர, பொருட்காட்சி வளாகத்தில் 125 சிறிய கடைகள், 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பொழுதுபோக்கு வளாகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 32க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள், முப்பரிமாண திரையரங்கம், 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் திறந்தவேளி திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொருட்காட்சி தொடங்கிய நாள் முதல் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிலையில், க்டந்த 28ம் தேதி ஒரே நாளில் 20,084 பெரியவர்கள், 5,044 சிறுவர்கள் என 25,128 பேர் பொருட்காட்சிக்கு வந்துள்ளனர்.
கடந்த 22 நாட்களில் 3.26 லட்சம் பெரியவர்கள், 77,067 சிறுவர்கள் என மொத்தம் 4.03 லட்சம் பேர் பொருட்காட்சியை கொண்டு ரசித்துள்ளதாக தமிழக சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.