தந்தை தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை: அதிரடிகாட்டிய விஜய்

இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து இருக்கிறார். அவரின் இந்த நடவடிக்கை நடிகர் விஜய்யையும் அவரது ரசிகர்களையும் அதிர வைத்திருக்கிறது.

விஜயகாந்துடன் செந்தூரப்பாண்டி படத்தில் நடிக்க வைத்தது மூலம் விஜய்க்கு வெள்ளித்திரை வெளிச்சம் தந்தவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். கதாநாயகனாக நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியதோடு எஸ்ஏசி, அடுத்தடுத்து தனது இயக்கத்தில் விஜய்யை நடிக்க வைத்தார். என்றாலும் நடிகர் விஜய்க்கு பெரிய வெற்றியை அவரது படங்கள் பெற்றுத் தரவில்லை.

இந்நிலையில் விஜய்யின் முதல் ரசிகனாக அவரது பெயரில் மன்றம் தொடங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார்.

தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து இருப்பதாக கூறி நடிகர் விஜய்யையும் அவரது ரசிகர்களையும் அதிர வைத்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இந்த அ.இ.த.வி.ம.இ. கட்சிக்கு தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகரன், பொருளாளராக அவரது மனைவி ஷோபா சந்திரசேகர் என பெயர்களை அறிவித்ததோடு. இத்தனை ஆண்டு காலமும் விஜய்க்காக நலத்திட்ட பணிகள் செய்து வந்த ரசிகர்களின் நலன் காப்பதற்காகவே இந்த அரசியல் இயக்கத்தை தொடங்கி இருப்பதாக கூறியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

ஒவ்வொரு படத்திலும் நடிகர் விஜய்யை அதிரடி நாயகனாகக் காட்டிய இயக்குனர்கள் அவரை தளபதியாக கொண்டு சேர்த்து எழுந்துள்ள நிலையில், விஜய்யின் ரசிகர்கள் பலத்தை வைத்து தேர்தல் நேரத்தில் ஆதரவு தருவதாக கூறி அரசியல் கட்சியினருடன் கூட்டணி பேரம் பேசும் நோக்கத்தில் இந்த கட்சி தொடங்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், கட்சியின் பெயர் அறிவித்த சில மணி நேரத்தில் ஒரு அறிக்கையை நடிகர் விஜய் வெளியிட்டு அவரது தந்தை எஸ்ஏசிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

அவரது அறிக்கையில், “இன்று என் தந்தை திரு. எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்து உள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். எனது ரசிகர்கள் எனது தந்தை ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்காட்சியில் இணைத்துக்கொள்ளவும் கட்சி பணியாற்றுவோம் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அந்த கட்சிக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், என் பெயரையோ, புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு அதிரடியான அறிக்கை மூலம் எச்சரித்துள்ளார் நடிகர் விஜய்.

அண்மைக் காலமாகவே நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது ஆதரவாளர்களை தனது இயக்கத்தில் இருந்து நீக்கி புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்ததாக கூறப்படுகின்றது.

நீக்கப்பட்ட நிர்வாகிகள் எஸ்ஏசியிடம் புகார் தெரிவித்த நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகவே விஜய்க்கு தெரியாமல் அரசியல் கட்சியாக மாற்றப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *