கர்நாடகாவில் போதைப்பொருள் விற்பனை வழக்கு: பாஜக நிர்வாகி, ஹோட்டல் அதிபர் உட்பட 15 பேர் கைது

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் போதைப்பொருள் வழக்கில் நடிகை ராகினி திவேதி யை தொடர்ந்து பாஜக நிர்வாகி, ஓட்டல் அதிபர் உள்பட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி நவி மும்பையில் போதைப் பொருள் விற்பனை செய்த எச்.ஏ.சவுத்ரி, ஆர். பத்ரே ஆகிய இருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

இவர்கள் அளித்த தகவலின் பேரில் பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, தொழிலதிபர் ரவீந்திரன், ஹோட்டல் அதிபர் முகமது அனூப் ஆகிய 3 பேரை ஆகஸ்ட் 25ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த மூன்று பேருக்கு உடந்தையாக இருந்ததாக கன்னட நடிகை ராகினி திவேதி, நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல் ஷெட்டி, ஓட்டல் அதிபர்கள் பிரதீக் ஷெட்டி, கார்த்திக் ராஜ், ஆர்டிஓ ஆய்வாளர் ரவிசங்கர் ஆகியோரை பெங்களூரு காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த கைது சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டில் கூறும்பொழுது, “நடிகை ராகினி திவேதி தனது நண்பர் ரவிசங்கர் மூலம் போதைப்பொருள் பயன்படுத்தி வந்துள்ளார். போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார். இருவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட்ட பிறகு ராகினி திவேதி யை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்.

சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல் செட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூரில் கன்னட திரையுலகினரை ஒருங்கிணைத்து இரவு விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அந்த விருந்தில் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுவரை கைது செய்யப்பட்ட 8 பேரின் செல்போன், மடிக்கணினிகளை ஆராய்ந்ததில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி மற்றும் பெங்களூருவில் ஓட்டல் நடத்தி வந்த விரேன் கன்னா என்பவரை காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 30 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் சிக்கியுள்ளன.

விரேன் கன்னாவை நேற்று பெங்களூரு வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுபோல பெங்களூருவில் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த 15 பேரை கைது செய்துள்ளோம்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இதுவரை ரூபாய் 2.13 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.‌ 35 செல்போன்கள், 17 மடிக்கணினிகள், 6 கார்கள், ரூபாய் 36 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் 4 தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் கைதான ஓட்டல் அதிபர்கள் கார்த்திக் குமார், அபி போகி ஆகிய இருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், பெங்களூருவில் தங்கி பயிலும் 6 வெளிநாட்டு மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளனர். அவர்களை தேடி வருகிறோம்”.

இவ்வாறு மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *