இழுபறியில் பீகார் மாநில தேர்தல் முடிவுகள் : 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கடும் போட்டி

பீகார் மாநில தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்று இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வெளியாகும் தேர்தல் முடிவுகளில் ஜேடியு – பாஜக கூட்டணி 122 தொகுதிகளிலும், ஆர்ஜேடி – காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி 112 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் என்று தெரிகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக தனித்து 73 தொகுதிகளிலும். ஜேடியு 41 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. மகாக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆர்ஜேடி தனித்து 73 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், 11 தொகுதிகளில் சிபிஐ (எம்எல்) முன்னிலை வகிக்கின்றன.

அங்கு ஏறக்குறைய 50 தொகுதிகளில் மகா கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது. வாக்கு வித்தியாசம் என்பது ஆயிரத்துக்கும் கீழ் தான். இந்த தொகுதிகளில் முன்னிலை பெற்று வருபவர்களுக்கும் அடுத்த இடத்திலுள்ள வேட்பாளருக்குமான வாக்குகள் வித்தியாசம் ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பதால் இறுதி நிலவரம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

25 தொகுதிகளில் முதலிரண்டு வேட்பாளர்களுக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் வெறும் 500 க்கு கீழ் தான் உள்ளதாக கூறப்படுகிறது. பல ஆய்வு தகவல்களின்படி பார்த்தால் 120 தொகுதிகளில் முதலிரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 3 ஆயிரத்திற்கும் குறைவு தான் என்கின்றனர்.

மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ (எம் எல் லிபரேசன்) இந்த தேர்தலில் நல்ல பலனை அடையும் என தெரிகிறது. அது போட்டியிட்ட 19 தொகுதிகளில் 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மேலும் சிபிஐ 4 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

அதேபோல் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 70 இடங்களில் 21 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பல இடங்களில் எல் ஜேபி கட்சி காங்கிரஸ் ஆர்ஜேடி வாக்குகளை பிரித்துள்ளது என்கின்றனர்.

தற்போதைய சூழலில் எந்த கூட்டணி வெற்றி வாய்ப்பைப் பெறும் என்பதை அறுதியிட முடியாது என்பது கள நிலவரமாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *