தமிழக பா.ஜ.க.வுக்கு தலைவர் நியமனம் ; கடும் அதிருப்தியில் கட்சியினர்..?

மிழக பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் எல்.முருகன், சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். தேசியத் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த வழக்குரைஞர்  எல். முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டது பலரும் ஆச்சிரியபட வைத்திருக்கிறது.

தமிழக பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் கடந்த ஆண்டு தெலுங்கானவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல், அக்கட்சியின் தேசிய தலைமை காலந்தாழ்த்தி வந்தது.  இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவராக ஜேபி நட்டா பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, விரைவில் தமிழக தலைவரும் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்திருந்தார்..

இந்தச்சூழலில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவிக்கு அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களான எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபட்டு வந்தது. குறிப்பாக வானதி சீனிவாசன் மாநில தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேசியத் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் வழக்குரைஞர்  எல். முருகன் தமிழக பாஜக தலைவராக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்(11.03.2020) நியமிக்கப்பட்டார். இது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் உருவாக்கியது.

தொடர்ந்து நேற்றைய தினம் (14.04.2020) தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, பொன்,ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் வழக்குரைஞர் எல்.முருகன்பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதற்கு தொண்டர்களில் ஒரு பிரிவினர் வரவேற்றாலும், முருகன் பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு மூத்த தலைவர்கள் வந்தவர்களில் பலரும் அதிருப்தியில் உள்ளதாகவே விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக இல.கணேசன் தமிழக பாரதிய ஜனதா தலைவராக செயல்பட்டு வந்தபோது,   எச். ராஜா, ராகவன், நாராயணன் மற்றும் வானதி சீனிவாசன் என அதன் முக்கியத் தலைவர்கள் பலரும் தமிழக பாரதிய ஜனதா மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு தினமும் வருகை தந்தவண்ணம் இருந்தனர்.

அதன்பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தமிழக பாரதிய ஜனதா தலைவர்களாக செயல்பட்டு வந்தபோது, அதன் முக்கிய தலைவர்கள் பலரும் கமலாலயத்திற்கு வருவதை குறைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தமிழக பாஜகவில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகள் தொடர்வதாக முன்னாள் தலைவர் கிருபாநிதி பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதே போன்ற ஒரு சூழல் தற்போது கணப்படுவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். உண்மை என்ன என்பது அடுத்துவரும் நாள்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *