“உடையும் மோடி என்ற பொய் பிம்பம்” – கொரோனாவால் சரிந்த பிரதமருக்கான ஆதரவு… அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகத் தொற்று எண்ணிக்கை 3 லட்சத்துக்குக் குறைவாக வந்தாலும், உயிரிழப்போர் எண்ணிக்கை 4,500க்கு மேல் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் பிரதமர் நரேந்திர மோடிக்கான ஆதரவு கடுமையாகச் சரிந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பா.ஜ.க வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் நரேந்திர மோடியை முதன்மைப்படுத்தி, பொய்களைக் கட்டமைத்து வெற்றி பெற்றனர்.

இந்த இரண்டு தேர்தலிலும், மக்களுக்காகக் கொடுத்த வாக்குறுதிகளைக் காட்டிலும் நரேந்திர மோடியின் பெயரையே முதன்மையாக வைத்து பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. இந்தியாவை இவர் ஒருவரால்தான் காப்பாற்ற முடியும் என்பது போன்று பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக பா.ஜ.கதான் ஆட்சி செய்து வருகிறது. நரேந்திர மோடிதான் பிரதமராக இருக்கிறார். ஆனால் இவர்கள் இந்துத்துவா திணிப்புக்குக் காட்டும் அக்கறையில் கொஞ்சம் கூட மக்களுக்கு இவர் காட்டவில்லை. பணமதிப்பிழப்பு, நீட், புதிய வேளாண் சட்டம், புதிய கல்விக் கொள்கை, சிஏஏ என மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்தி இந்திய மக்களை வீதிக்குத்தான் வரவைத்தாரே தவிர, மக்களுக்கான திட்டத்தை மோடி கொண்டுவரவில்லை.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமும் அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் மோடி மீதான மதிப்பீட்டைக் குறைத்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த தரவுகள் புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த வாரத்தில் இந்தியாவில் 2.5 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனம், மோடி மீதான மதிப்பீடு கடந்த வாரத்தில் 63 விழுக்காடாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மோடியின் செல்வாக்கில் 22 புள்ளிகள் சரிந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கு கொரோனா பெருந்தொற்றை முறையாக கையாளாதாததே முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் மயான காட்சிகளும், சாலைகளில் நோயாளிகள் அவதியுறும் காட்சிகளும் மோடியின் செல்வாக்கில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் மார்னிங் கன்சல்ட் நிறுவனம் கூறியுள்ளது.

நரேந்திர மோடி தான் இந்தியாவைக் காப்பாற்றுவார் என ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்து மக்கள் ஓட்டை வாங்கி வெற்றி பெற்றார்கள். தற்போது கொரோனாவுக்கு மக்கள் இரையாகி வருகிறார்கள். இதை தடுப்பதில் மோடி தோல்வியடைந்துவிட்டார். கொரோனா பேரிடரில் மோடியின் கையாலாகாத்தனத்தால், அவர்கள் கட்டமைத்த பிம்பம் தற்போது முழுதாக உடைந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *