வழக்கு என வந்தால் எஸ். வி. சேகர் ஒளிந்து கொள்வார் – முதல்வர் பழனிசாமி

“நாங்கள் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ் வி சேகர் பெரிய தலைவர் இல்லை. நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் ஏற்க தயார்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்றார். மேலும், அம்மாவட்டத்தில் 8.69 கோடி ரூபாய் செலவில் 42 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 8.88 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை அவர் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை நடத்தினார். மேலும், விவசாய பிரதிநிதிகள் சுய உதவி குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் முதல்வர் பழனிசாமி.

அப்போது அவர், “விவசாய பிரதிநிதிகள், சுய உதவி குழுவினருடன் ஆலோசனை நடத்தினேன். அரசு நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். 43 ஆயிரத்து 528 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை எடுக்க படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க உள்ளது கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைய உள்ளது புதிய கலை அறிவியல் கல்லூரி துவக்கப் படும் உழைக்கும் மகளிர் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் எஸ். வி. சேகர் ஏதாவது பேசுவார். வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி. சேகர் பெரிய தலைவர் இல்லை. எங்களுக்கு இந்தி தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும்..? அவர் முதலில் எந்த கட்சி..?நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் ஏற்க தயார்” இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், “நோய் பரவல் தமிழகத்தில் ஏற்பட்டவுடன் தமிழக மக்கள் வாழ்வாதாம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கம் தலா 1000 ரூபாய், விலையில்லா சர்க்கரை, எண்ணெய், அரிசி ஆகியவை வழங்கப்பட்டன. தற்போது மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களுக்கும் இலவச பொருள்கள் வழங்கப்பட்டு, அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான செலவையும் அரசு ஏற்றது. அம்மா உணவகம் மூலமும் விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *