ரூபாய் நோட்டு, செல்போன் திரையில் 28 நாட்கள் கொரோனா வாழும் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ரூபாய் நோட்டுகள், கண்ணாடிகள், செல்போன் திரை, இரும்பு பொருட்கள் போன்றவற்றில் 28 நாட்கள் வரையிலும் கொரோனா வைரஸ் தாக்குப் பிடிக்கும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டாம் அலையாக தாக்க தொடங்கியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. இதுவரை தனக்கு எந்த பாதிப்பும் வராது என்று கூறுபவர்கள் பலரும் வரும் நாட்களில் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருப்பதே நல்லது என்ற எச்சரிக்கையை மருத்துவ நிபுணர்கள் தருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸின் வீரியம் எத்தனை நாட்கள் என்பதை கண்டறிந்து உள்ளது புதிய ஆராய்ச்சி. “ஆஸ்திரேலியா நேஷனல் சயின்ஸ் ஏஜென்சி” மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி தொடர்பான ஆய்வுக் கட்டுரை “வைராலஜி ஜர்னல்” இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வு கட்டுரையில், “கொரோனா பரவலைத் தடுக்க அதன் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது முக்கியம். இன்ஃப்ளூயன்சா வைரஸ் ஆனது 17 நாட்கள் வரையிலும் வீரியத்துடன் இருக்கும். அதேபோல் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர் வாழும் என்பதை கண்டறிவது அவசியம் என்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சராசரி வெப்ப நிலை என்று குறிப்பிடப்படும் 20 டிகிரி செல்சியஸில் கொரோனா வைரஸ் நல்ல செயல்திறனுடன் இருக்கிறது. அதுவே 30 முதல் 40 டிகிரி செல்சியஸில் வைரஸின் வீரியம் குறைகிறது. இந்த வெப்பநிலையில் அந்த கொரோனா வைரஸால் அதிகம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை.

மேலும், வழுவழுப்பான தளங்களில் நீண்ட நேரம் கொரோன வைரஸ் உயிர் வாழ்கிறது. குறிப்பாக கண்ணாடிகள், ஸ்மார்ட்போன்களின் திரை, ரூபாய் நோட்டுகள், நெகிழி போன்ற வழுவழுப்பான தளங்களில் 28 நாட்கள் வரையிலும் இருக்கும்.

எச்சில், சளி போன்றவற்றின் மூலம் கொரோனா பரவுகிறது என்பது நமக்குத் தெரியும். அதே போல உடலின் புரதம், கொழுப்பு போன்றவற்றிலும் கொரோனா வைரஸ் வாழும் நேரம் அதிகரிக்கிறது. ஆனால், இது குறித்து இன்னும் அதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன”.

இவ்வாறு “ஆஸ்திரேலியா நேஷனல் சயின்ஸ் ஏஜென்சி” வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *