ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்த திருமாவளவன் வழக்க் அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மறுத்துவிட்டார். மேல்முறையீடு மனுவாக தாக்கல் செய்ய பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28-ம் தேதிக்குள் அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது. விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவளராக சித்தரிக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது. எனவே, அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக இன்று அல்லது நாளை விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி, ஏற்கெனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாதபோது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார்.

மனுவின் எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்யுங்கள் என திருமாவளவன் தரப்பிற்கு அறிவுறுத்தினார்.

தனது மனுவை தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதிகள், திருமாவளவன் கோரிக்கை குறித்து மேல்முறையீடாக தான் தாக்கல் செய்யமுடியும் என விளக்கம் அளித்துள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *