கார்ப்பரேட்டுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரிச்சலுகை; டூவீலர் ஓட்டுபவர்களுக்கு ரூ.33 வரி?: மோடி அரசின் மோசடி

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரிச்சலுகை அறிவித்த மோடி அரசுதான், நாம் நம் டூவீலருக்கு போடும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ரூ.33 வரியாக வசூலிக்கிறது என தினகரன் தலையங்கம் தீட்டியுள்ளது.

‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் வருமாறு:-

மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு மக்களுக்கு புதுப்புது வேதனைகளை தருகிறது. ஆனால், இதையும், தன்னுடைய ஆட்சிக்கால சாதனையாகத்தான் மோடி பார்க்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை சதமடித்து பல நாட்கள் ஆகிவிட்டது.

தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணராத ஆட்சியாளர்களை நாம் பெறவில்லை. அவர்களது நோக்கம் ஏழை, பாழைகளை சுரண்டி கொழுத்த பணக்காரர்களை குறிப்பாக அவர்களுக்கு நெருக்கமான நிறுவனங்களை வளம் பெறச் செய்வதே என்பது நிதர்சனம்.

கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அறிவிக்கும் அதே அரசுதான், பெட்ரோல், டீசலுக்கான வரியையும் அதிகரிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரிச்சலுகை அறிவித்த மோடி அரசுதான், நாம் நம் டூவீலருக்கு போடும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ரூ.33 வரியாக வசூலிக்கிறது. 2014ல் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இது வெறும் ரூ.9.48 ஆக இருந்தது.

அதாவது மோடி ஆட்சிக்காலத்தில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.23.52 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. டீசலை பொறுத்தவரை 2014ல் லிட்டருக்கு ரூ.3.56ஆக இருந்த மத்திய அரசு வரி இப்போது ரூ.31.80 ஆக உயர்ந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த ஆண்டு பெட்ரோலிய பொருட்கள் வரி வருவாய் ரூ.72,160 கோடி.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி வரை 10 மாதத்தில் கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா? ரூ.2,94,000 கோடி. அடுத்த 2 மாதங்கள் கணக்கை மோடி அரசு இன்னும் வெளியிடவில்லை. கடந்த 2019-20ஐவிட 2020-21ம் நிதியாண்டில் கூடுதலாக ரூ.1,90,000 கோடி பெட்ரோல், டீசலுக்கு புதிதாக விதிக்கப்பட்ட வரி மூலம் கிடைக்கும் என்று அரசே பெருமிதத்துடன் தெரிவிக்கிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்த ரூ.1.45 லட்சம் சலுகையை வட்டியும் முதலுமாக பெட்ரோல், டீசல் விற்பனையில் வாரி சுருட்டியுள்ளது அரசு. கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் இழந்து, கடனில் தத்தளிக்கும் சாமானியனின் தலையில் இப்படி ஒரு சுமையை ஏற்றிய அரசுக்கு கண்டனங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் குழுவினரும் தங்கள் பங்குக்கு பெட்ரோல், டீசல் வரியை குறைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். பெட்ரோல், டீசல் வரியை பணம் கறக்கும் பசுவாக நினைப்பதாக அரசை சாடிய அந்த குழுவினர், அரசின் செயல்பாட்டால் பொருளாதார மீட்சி காலதாமதமாவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இதை தடுக்க உடனடியாக எரிபொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று ஆய்வுக் குழு கூறியுள்ளது. மக்கள், அரசியல் தலைவர்கள் சொல்லி கேட்காத அரசு, அவர்கள் நியமித்த ஆய்வுக் குழுவின் ஆலோசனையையாவது கேட்குமா?” எனத் தெரிவித்துள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *