நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்: இயக்குனர் வெற்றிமாறன்
திரைபடங்களிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் தமிழ் ஸ்டூடியோ சார்பில் குறும்படம் மற்றும் ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தேன். இதுபோன்ற பிரச்சனைகளை கையாளும்போது எதனை முதன்மைப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தேன்.
அதற்கு அவர், “தனிமனிதால் சமூகத்திற்கு தீர்வு கிடைக்கும் என திரைபடத்தில் சொல்லாதீர்கள். அதே தவறு தான் நிகழ்கிறது. அமைப்பால் திரள வழிசெய்யுங்கள்” என்றார். மேலும், “கலை என்பது ஒரு அரசியல். நாம் தெரிந்தோ, தெரியாமலோ அரசியலுக்குள் தான் இருக்கிறோம்” என திருமாவளவன் சொல்லியிருந்தார். இலக்கியம், திரைபடம் எப்படி அவர்கள் கையில் இருந்தது. அந்த தமிழ் திரைபடத்தை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது. அதனால்தான் வெளிப்புற ஆதிக்கத்தை எதிர்க்கும் பக்குவத்தையும் திரைபடம் பெற்றுள்ளது என நினைக்கிறேன். திரைபடம் என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையும் கலைவடிவம்.
திரைபடத்தை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம். திரைபடத்தை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள். அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது.
திரைபடங்களிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன்” இவ்வாறு இயக்கநர் வெற்றிமாறன் உரையாற்றினார்.