சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக மாவட்ட நீதிபதிகள் 10 பேர் நியமனம்; குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 10 மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இவர்கள் விரைவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்க உள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் பணியிடம் 75 ஆகும். ஆனால், 53 நீதிபதிகளே பணியில் உள்ளனர். தற்போது 22 பணியிடங்கள் காலியாகவே உள்ளன. பணி மூப்பு அடிப்படையில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருபவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவர்.

அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதிகள் ஆக பணியாற்றி வரும் நக்கீரன், இளங்கோவன், சந்திரசேகரன், சிவஞானம், ஆனந்தி, கண்ணம்மா, சக்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா, தமிழ்செல்வி ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மாவட்ட நீதிபதிகள் 10 பேரையும் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தது. அதேநேரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்காக அந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (01-12-2020) குடியரசுத் தலைவர் இதற்கான ஒப்புதல் அளித்து முறையான அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து மாவட்ட நீதிபதிகள் 10 பேரும் விரைவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்க உள்ளனர். இவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 63 ஆக உயரும்.

இந்த 10 மாவட்ட நீதிபதிகளில் முரளி சங்கர் – தமிழ் செல்வி ஆகியோர் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. நீதித்துறை வரலாற்றில் கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொள்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *