சட்டம் ஒழுங்கு “சிறப்பு டிஜிபி” நியமனம்: தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிரானது – துரைமுருகன் கண்டனம்

“சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியை நியமனம் செய்தது உச்சநீதிமன்ற வரையறைகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கை. அதை திரும்பப் பெற வேண்டும்” என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்து சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக முதலமைச்சர் பழனிசாமி நியமித்திருப்பது உச்சநீதிமன்றத்தால் பிரகாஷ் சிங் வழக்கில் வழங்கப்பட்ட ஏழு கட்டளைகளுக்கும், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த சட்டம் – 2013 கற்கும் முற்றிலும் எதிரானதாகும்.

தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அதாவது தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனராக திரு திரிபாதி ஐபிஎஸ் இரண்டு ஆண்டுகளுக்கு (ஜூன் 2021) வரை பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது அதிகாரத்தை குறைக்கும் வகையில் தேர்தல் பணிகளில் “எடப்பாடிக்கு” எடுபிடியாக இருக்க வேண்டும் என்பதற்காக – காவல் தலைமையகத்தில் இன்னொரு டிஜிபி அந்தஸ்துள்ள அதிகாரியை சட்டம் ஒழுங்குப் பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம் ஆகும்.

அரசியல் ரீதியான அழுத்தங்கள் – சட்ட விரோத உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர்க்கவே, தேசிய காவல் ஆணையம் பரிந்துரைத்து – பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம், “சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கு இரு ஆண்டுகள் பதவி காலம்” என்று வரையறுத்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் – குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு கொண்டு வந்த காவல்துறை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் – அதுவும் உள்துறையைக் கையில் வைத்திருக்கும் அமைச்சர் திரு. பழனிசாமி செயல்படுகிறார்.

தனக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, உலக அளவில் புகழ்பெற்ற தமிழகக் காவல்துறைக்கு – குறிப்பாக சட்டம்- ஒழுங்கு பணிகளை கண்காணிக்க இரு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து இருப்பது வேதனைக்குரியது.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலைகள் – அதுவும் கூலிப்படைகளை வைத்து நடத்தப்படும் கொலைகள் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவிற்கு நிலைமை மோசமாகி- சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க காவல்நிலைய மரணங்கள் – குறிப்பாக தூத்துக்குடி சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலை, ரவுடிகளுக்குள் பட்டப்பகலில் நடக்கும் குத்து வெட்டுக்கள் – “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்பது போன்ற பொது அமைதிச் சீர்குலைவு என, ஒட்டுமொத்த தமிழ்நாடும் எடப்பாடி திரு. பழனிசாமி ஆட்சியில் மக்களுக்கு சற்றும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டது. ஆனால், இப்போது மட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள அதிமுக ஆட்சியின் டிஜிபி நியமனங்களில் எல்லாம் பிரகாஷ் சிங் வழக்கில் வரையறுத்து சொல்லப்பட்ட காவல்துறை சீர்திருத்தம் கைவிடப்பட்டுள்ளது. திட்டமிட்டு உள்நோக்கத்துடன் மீறப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் நேரத்தில் இரு ஆண்டு பதவிக்காலம் கொடுத்து டிஜிபி ஆக்குவது. முறைப்படி 2 ஆண்டு பதவிக் காலத்தில் நியமிக்கப்பட்ட டிஜிபியை நள்ளிரவில் ராஜினாமா செய்ய வைப்பது என்று தொடர்ந்து – இப்போது புதிய உத்தியாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரை டம்மியாக்குவதற்கு, அவருக்கு இணையாக ஒரு டிஜிபியை அதே பொறுப்பில் அமர்த்துவது வரை, அதிமுக அரசின் அத்துமீறல் படலம் நீண்டு வந்து நிற்கிறது.

தமிழக காவல்துறையை சீரழிக்கும் முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்துக்குரியது.

ராஜேஷ் தாஸ் என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பதவியுயர்வு கொடுப்பது தவறில்லை. அவருக்கு வேறு பதவிகள் கொடுப்பதிலும் தவறில்லை. ஆனால். அவரை ஏற்கனவே இருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கு போட்டியாக நியமிப்பதும் – அதுவும் அவரது அறைக்கு எதிரே ஒரு அறையில் அமர்த்தி வைப்பதும் முதல் அமைச்சருக்கு அழகல்ல.

“இரட்டை தலைமையால்” அதிமுக ஆட்சியில் நடக்கும் கூத்துகள், டிஜிபி அலுவலகத்தில் அரங்கேறட்டும் – அங்கும் நாமும் ஓபிஎஸ்ஸூம் அடித்துக்கொள்வது போல் – அதிகாரிகளுக்குள் அடித்துக் கொள்ளட்டும் என்ற இந்த விபரீத விளையாட்டு தமிழக காவல் துறையின் தலைமைப் பண்பை அடியோடு நாசப்படுத்தி விடும் என்று எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.

இரண்டு டிஜிபி களுக்கு என்னென்ன பொறுப்பு? தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் கட்டுப்பட வேண்டுமா? அல்லது அதே தகுதியில் டிஜிபியாக இருக்கும் “ஸ்பெஷல் டிஜிபி” கட்டுப்பட வேண்டுமா?

தலைமை அலுவலகத்தில் “பனிப்போர்” துவங்கினால், அது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல் நிலையங்களிலும் எதிரொலிக்கும்; காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பிரதிபலிக்கும். தமிழகக் காவல்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையும் அறவே தகர்த்து எறியப்பட்டு விடும்.

ஆகவே, “ஒருங்கிணைப்பாளர்”, “இணை ஒருங்கிணைப்பாளர்” என்று அதிமுகவிற்குள் உருவாகியுள்ளது போல், காவல்துறை தலைமையகத்தில் “டிஜிபி”- “ஸ்பெஷல் டிஜிபி” என்று உருவாக்கியுள்ளதைத் திரும்பப் பெற்று – பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *