200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்: ஜனவரியில் பரப்புரையை தொடங்கும் மு.க.ஸ்டாலின் திமுக நிருவாகிகளுக்கு அறிவுறுத்தல்

நடைபெற இருக்கும் தமிழக சட்டைப் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜனவரி முதல் வாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுளளார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2021 ஏப்ரலில் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார்.

தொடர்ந்து அவர் மண்டலம் வாரியாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருகிறார். இப்போது காணொலி வாயிலாக கலந்துகொண்டு மு.க. ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

இதில் தேர்தல் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அவர் வழங்கி வருகிறார் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அப்போது அவர் வேண்டுகோள் விடுக்கிறார். மேலும், திமுக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை சந்தித்து கருத்துகளையும் கேட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் இடைப்பாடியில் தனது பரப்புரையை தொடங்கினார். முன்னதாக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனும் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பரப்புரையை மேலும் தீவிரப்படுத்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று (20-12-2020) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 1,659 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், “வருகிற 23-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ந் தேதி வரை 16 ஆயிரம் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். 1500 திமுக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். “தமிழகம் மீட்போம்” என்ற எனது பரப்புரைக் கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடந்து வருகின்றது. லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்று வருகிறார்கள். அநேகமாக ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பரப்புரைப் பயணத்தை தொடங்க இருக்கிறேன்.

தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்றும் சொல்கிறார்கள். அதனால் நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும் என்பதற்காக இப்போதே தயாராகிறோம். யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை தொகுதி, என்னென்ன தொகுதி, யார் வேட்பாளர் – என்பதையெல்லாம் தலைமை முடிவு செய்து கொள்ளும். எந்த வாக்கு பெட்டியை திறந்தாலும் உதய சூரியன் உதிக்க வேண்டும். அப்படி ஒரு நிலையை உருவாக்க உங்களால் முடியும்; உங்களால் மட்டுமே முடியும்.

அதிமுகவை நிராகரிக்க வைப்போம்; திமுகவை ஆட்சியில் அமர வைப்போம்.நம்முடைய இலக்கு 200 தொகுதிகளுக்கு மேல் தான் என்று நாம் உறுதி எடுத்தாக வேண்டும். “மிஷன் 200” என்ற இலக்கை நோக்கி நாம் சென்றாக வேண்டும்.

200க்கும் மேல் என்பது சாத்தியம்” இவ்வாறு உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து தேர்தல் பணிகளை திமுகவினர் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர் அதேநேரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜனவரிக்கு பிறகு முழு வீச்சில்அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *