ஆதிக்கவாதிகளிடமிருந்தும், அடிமைவாதிகளிடமிருந்தும் தமிழகத்தை மீட்போம் : மு.க. ஸ்டாலின் கடிதம்

நெருக்கடிகளை நான் பார்த்துக்கொள்கிறேன், மக்கள் தரப்போகும் வெற்றியை சிந்தாமல் சிதறமால் நீங்கள் பெற்றுத்தாருங்கள்  என தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மகள் மற்றும் மற்ற பிற தலைவர்களின் வீடுகளில் தற்போது நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்கு பிறகு, தனது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

           “2021 ஆம் ஆண்டு பிறந்தபோதே இது நமக்கான ஆண்டு, திமுக வின் ஆண்டு, பத்தாண்டு காலமாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் புதிய வெளிச்சம் பாய்ச்சும் உதய சூரியன் உதிக்கும் ஆண்டு என்று தெரிவித்தேன். அந்த நம்பிக்கை வெற்றிகரமாக விளைந்திருப்பதை தேர்தல் களத்தில் காணமுடிகிறது. தமிழகத்தை மீண்டும் சுயமரியாதை கொண்ட மாநிலமாக, தொழில் வளர்ச்சி உள்ள மாநிலமாக, வேலை வாய்ப்பு பெருகும் மாநிலமாக அனைத்து துறைகளிலும் முதலிடம் பெறும் மாநிலமாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் வாக்காளர்களிடம் உள்ளது.

            அந்த எண்ணம் நிறைவேற, உதயசூரியன் சின்னமும், தோழமைக் கட்சிகளின் சின்னமுமே உறுதுணையாக இருக்கும் என்பதால் 234 தொகுதிகளிலும் மக்களின் பேராதரவு திமுக வுக்கு உள்ளது. மகத்தான இந்த வெற்றிப் பயணத்தை எப்படியாவது தடுத்த நிறுத்த வேண்டும் என மத்திய, மாநில ஆளுங்கட்சிகளான பாஜக, அதிமுக கூட்டணி தொடர்ந்து முயற்சிக்கிறது. திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசினர். திசை திருப்பல்கள், இட்டுக்கட்டுதல், வெட்டி, ஒட்டுதல் என பல தில்லுமுல்லு வேலை செய்து பார்த்தனர். மக்களிடம் எதுவும் எடுபடவில்லை.

            திமுகவின் வலிமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருப்பதை கள நிலவரமும், ஊடகங்களின் கணிப்புகளும் ஆட்சியாளார்களுக்கு தெளிவாக காட்டிவிட்டது. அவர்களின் அத்துனை மோசடி அம்புகளும் முனை முறிந்த நிலையில், கடைசியாக ரெய்டு எனும் மிரட்டல் ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள். மிரட்டலுக்கும், நெருக்கடிக்கும் அஞ்சாத இயக்கம் தான் திமுக. ஜனநாயக களத்தில் நேருக்கு நேர் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு வழியில்லாதவர்கள், மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்திப்பவர்கள், மிரட்டல் மூலம் திமுக வை வீழ்த்திவிடலாம் என மனப்பால் குடிக்கிறார்கள்.ஒவ்வொரு உடன்பிறப்புக்குள்ளும் கருணாநிதி வாழ்கிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்ற கருணாநிதி வாழ்கிறார். அவர்தான் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வேட்பாளராக நிற்கிறார்.

            அதனை நிரூபிக்கும் வகையில், திமுக வினர் களப்பணியில் கவனம் செலுத்துங்கள். பெருகிவரும் மக்களின் ஆதரவை ஒருமுகப்படுத்துங்கள். அவற்றை ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகளாக்க பாடுபடுங்கள். ஆளும் தரப்பின் பொய் பரப்புரை, ரெய்டு நடவடிக்கை, திசை திருப்பும் நடவடிக்கைகளால் உங்கள் கவனம் சிதறிவிட வேண்டாம்.

            நெருக்கடியை நான் பார்த்துக்கொள்கிறேன். மக்கள் தரப்போகும் வெற்றியை சிந்தாமல் சிதறாமல் நீங்கள் பெற்றுத்தாருங்கள். 234 தொகுதியிலும் வெல்வோம். ஆதிக்கவாதிகளிடமிருந்தும், அடிமைகளிடமிருந்தும் தமிழகத்தை மீட்போம்”.

            இவ்வாறு  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *