திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கொரோனாவால் காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்திலேயே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் பிடியில் உலக நாடுகள் சிக்கி தவித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோ 4 லட்சத்து 14ஆயிரத்தை கடந்துள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு 7ஆயிரத்து 700ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது பொதுமக்களிடத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன்-2 தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெ. அன்பழகனுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது.

தொடக்கத்தில் உடல்நிலை சீராக இல்லை என்றாலும், சற்று முன்னேற்றம் அடைந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 8.05 மணி அளவில் கொரோனாவின் தாக்கத்தால் சிகிச்சை பலனளிக்காமல் ஜெ.அன்பழகன் உயிர் பிரிந்தது.

62 வயதான அவர் திமுக சார்பில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். தென்சென்னை மற்றும் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தவர்.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் மக்கள் நலன் காக்கவும் திமுக சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்நின்று நடத்தியவர் என்று திமுகவினரால் நினைவுபடுத்துகின்றர்.  அதிமுக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து சட்டப்பேரவையிலும், மக்கள் மேடைகளிலும் துணிச்சலுடன் சுட்டிக் காட்டியவர். அவரது மறைவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிருவாகிகள்,  தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *