“கோமியம் குடி… கொரோனா வராது” : மீண்டும் சர்ச்சை கிளப்பிய பா.ஜ.க எம்.பி – மவுனம் காக்கும் மோடி அரசு

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் இந்தியா பேரழிவைச் சந்தித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை, ஆச்சிஜன், மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா தொற்றைத் தடுத்து உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக அறிவியல் பூர்வமாக சோதனை செய்யப்பட்ட கோவாக்சின், கோஷீல்டு போன்ற தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவிய காலத்திலிருந்து இதுவரை பா.ஜ.கவின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிகள் தொடர்ச்சியாகக் கோமியம் குடித்தால், மாட்டுச் சாணம் உண்டால் கொரோனா வாரது எனப் பேசி, மூட நம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். இவர்களின் பேச்சை நம்பி சிலர் கோமியம் குடித்து உயிரிழந்தும் இருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலமான குஜராத்தில் கூட மாட்டுச் சாண குளியல் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.கவினரின் இந்த செயலை உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ கழகம் கண்டித்தாலும், பிரதமர் மோடி ‘இப்படிச் செய்வது தவறு’ எனக் கூறாமல் மவுனம் காத்தே வருகிறார்.

கோமியம் குடிப்பது, சாணத்தில் குளிப்பது போன்ற செயல்களால் உலக மக்களிடையே இந்தியா என்றால் இப்படித்தான் என்ற கண்ணோட்டம் ஏற்படலாம் என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சனம் செய்திருந்தார்.

ஏற்கனவே, பா.ஜ.க எம்.பியான பிரக்யா சிங் தாக்கூர், பசுவின் சாணம், கோமியம் கலந்த பஞ்சகாவ்யா மருந்தை உண்டதன் மூலம் தன்னுடைய மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டதாக கூறியிருந்த நிலையில், தற்போது மீண்டும் நான் கோமியம் குடிப்பதால் கொரோனா வரவில்லை எனப் பேசியிருப்பது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

போபாலில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரக்யா சிங், “நான் பசுவின் சிறுநீரைத் தினமும் குடிக்கிறேன். அதனால்தான் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை. தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும்.

அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவற்றை நட்டு வளர்க்க வேண்டும். அதை நட்டு நீங்கள் வளர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவை இருக்காது. இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும். அதற்கு தேவையான தண்ணீர் வசதி தண்ணீர் டேங்குகள் மூலமாக வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *