கொரோனா வைரஸைத் தொடர்ந்து பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது – ராகுல்காந்தி எச்சரிக்கை

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட பொதுமுடக்கத்தை மத்திய அரசு முறையாக பயன்படுத்தவில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “கொரோனா வைரஸைத் தொடர்ந்து பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது” என்று தற்போது மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமுடக்க காலத்தில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு நிதி உதவி வழங்கி, கைதூக்கி விட வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

பொதுமுடக்கத்தை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றும், அதனால் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார்.

ராகுல் காந்தி நேற்று முன்தினம் (07/07/2020) தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து உள்ளார்.

அந்த பதிவில், “நகர்ப்புறங்களில் இருக்கும் குடும்பங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் இருக்கும் குடும்பங்கள் ஏழ்மையில் சென்றுவிட்டன. 10 குடும்பங்களில் 8 குடும்பங்களுக்கு பொதுமுடக்க காலத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (08/07/2020) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, பொருளாதாரத்தில் மிகப்பெரிய சுனாமி வந்துகொண்டிருக்கிறது என்று மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில், “சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அழிந்துவிட்டன. பெருநிறுவனங்கள் மிகப்பெரிய அழுத்தத்தில் சிக்கி இருக்கின்றன. வங்கிகளும் பெரும் இக்கட்டான சூழலில் இருக்கின்றன. வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வருவதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

கொரோனா வைரஸைத் தொடர்ந்து, பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது என்று சில மாதங்களுக்கு முன்பே எச்சரித்து இருந்தேன். எனது எச்சரிக்கைகள் பாஜக அரசால் கேலி செய்யப்பட்டன. ஆனால், எனது வார்த்தையில் இருந்த உண்மையை அறிந்த ஊடகங்கள் நாட்டுக்கு எச்சரித்தன” என தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட்டர் பதிவோடு ஒரு பொருளாதார ஆய்வறிக்கையையும் அவர் இணைத்துள்ளார். அந்த அறிக்கையில், “அடுத்த நிதியாண்டில் நாட்டில் உள்ள முதல் 500 பெரிய தனியார் நிறுவனங்கள் பெரும் கடனில் சிக்கும், 1.67 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் வங்கிகளுக்கு ஏற்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பதிவில், “இந்த உலகம் தன்னை போன்றது என்று பிரதமர் மோடி நம்புகிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருக்கும் என்று நினைக்கிறார் அல்லது மிரட்டி பணிய வைக்க முடியும் என்று நினைக்கிறார். உண்மைக்காக போராடுபவர்களுக்கு ஒருபோதும் விலை இல்லை. அவர்களை மிரட்டி பணிய வைக்கமுடியாது என்பதை அவர் ஒருபோதும் புரிந்து கொள்ளமாட்டார்” என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *