கடன் தவணையை 2 ஆண்டுகள் வரை ஒத்தி வைக்க முடியும் : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, ஆர்பிஐ ஒப்புதல்

வங்கிகளில் பெற்ற கடன்களுக்கான தவணையை வசூலிப்பதை இரண்டு ஆண்டுகள் வரை ஒத்தி வைக்க முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசம், இந்திய ரிசர்வ் வங்கியும் நேற்று (01/09/2020) ஒப்புதல்

அளித்துள்ளது. மேலும், நெருக்கடியை எதிர்கொண்டுள்ள துறைகளுக்கு உதவுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமுலுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணை (இஎம்ஐ) வசூலிப்பதை மார்ச் முதல் மே வரை 3 மாதங்கள் வங்கிகள் நிறுத்தி வைப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேலும் மூன்று மாதங்களுக்கு இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதனால் வீடு, வாகனம், தனிநபர், தொழில், கடன் அட்டை (கிரெடிட் கார்டு) கடன் என பல்வேறு பிரிவுகளில் கடன் பெற்று இ எம் ஐ செலுத்தி வந்தவர்கள் பயனடைந்தனர். எனினும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை நீட்டிக்கப்படவில்லை.

இந்த 6 தவணைகளும் கடன் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் என்றும், நிறுத்திவைப்பு காலத்துக்கு உரிய வட்டியும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றும் வங்கிகள் அறிவித்தன.

கடனுக்கான மாதத் தவணையில் அசலுடன் வட்டியையும் சேர்த்து தான் வங்கிகள் வசூலிக்கின்றன. இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட 6 மாத கடன் தவணைக்கும் சேர்த்து பின்னர் வட்டி வசூலித்தால் வீட்டு கடன் போன்ற நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு அது கூடுதல் சுமையாக அமையுமே தவிர, நிவாரணமாக அமையாது. இதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உள்பட பல்வேறு தரப்பிலிருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, “இந்த விடயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. ரிசர்வ் வங்கியை முன்னிறுத்தி விட்டு மத்திய அரசு தனது பொறுப்பில் இருந்து விலக கூடாது. ஆர்பிஐ என் பின்னால் மத்திய அரசு ஒளியக் கூடாது. இது தொடர்பாக ஒரு வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு ஆர்பிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “கொரோனா பிரச்சனை, பொது முடக்கம் போன்ற காரணங்களால் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 24 விழுக்காடு சரிந்துவிட்டது. நெருக்கடியில் உள்ள துறைகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் இந்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வட்டி மீது வட்டி வசூலிக்கப்படுவது தொடர்பான பிரச்சினையை தீர்க்க மத்திய அரசும், ஆர்பிஐ-யும் ஆலோசனை நடத்தி வருகின்றன. இதில் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும், கடன் தவணை ஒத்திவைப்பு இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பாக மத்திய அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது” என்றார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை (செப் 02) தொடர்ந்து நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். முன்னதாக, கடன் தவணை ஒத்திவைப்பு காலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற வாதத்தையும் மனுதாரர்கள் தரப்பு முன்வைத்தது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், “கடன் தவணை ஒத்திவைப்பு காலத்துக்கான வட்டி மீது வட்டி வசூலிக்க படக்கூடாது என்று கூறுவது நீதித்துறையின் விதிகளுக்கு எதிரானது. மேலும், தவணை ஒத்திவைப்பு சலுகை பெற்றவர்களுக்கு மேலும் சலுகைகள் அளித்தால் தவணை சலுகையை பயன்படுத்தாமல் கடனை திருப்பிச் செலுத்தி வருபவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அமையும்” என்று கூறப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *