என்கவுண்டர்கள் ஊக்குவிக்கப்பட்டால் நாளை நாமும் அதற்கு பலியாகலாம்- நீதியரசர் செல்லமேஸ்வர்

விசாரணையற்ற தீர்ப்பும் காவல்துறை என்கவுண்டர் கொலைகளும் எந்த சாதாரண மனிதனும் அரசின் நியாயமற்ற நடவடிக்கைக்கு பலியாகும் விபரீத சூழலை உருவாக்கும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஜே. செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று ஹைதராபாத்தின் ஐ.சி.எஃப்.ஏ.ஐ சட்டக்கல்லூரியில் முன்னாள் நீதியரசர் செல்லமேஸ்வர் சட்டத்தை பாதுகாப்பது குறித்து உரையாற்றினார். அப்போது, “காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களை என்கவுண்டரில் கொலை செய்வது ஊக்குவிக்கப்பட்டால் நாளை நம்மில் யார் வேண்டுமானாலும் அதற்கு பலியாகலாம்” என்று அவர் கூறியதாக  பார் & பெஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சுட்டுக் கொல்லப்படடதைச் சுட்டிக்காட்டி செல்லமேஸ்வர் இதை கூறியுள்ளார்.

அதில், “செய்தித்தாள்களில் சுருக்கமான விசாரணை குறித்தும், விசாரணையற்ற தீர்ப்பு குறித்தும் படிக்கும் போது நன்றாகவே இருக்கும். ஆனால், நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்த நால்வரோடு அது நின்றுவிடப் போவதில்லை.

இந்த மாதிரியான அமைப்பு ஊக்குவிக்கப்பட்டால், நம்மில் யார் வேண்டுமானாலும், நிரபராதியான யார் வேண்டுமானாலும் பலியாகலாம். உளளுரில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரிகளுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், அவர் பொய்யாக உங்கள் மீது குற்றம் இருப்பதாக சொன்னால், அதற்கு பிறகு உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

சட்டத்தை பின்பற்றாத அரசின் (காவல்துறையின்) நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதற்கு மக்களிடமும் பல காரணங்கள் இருக்கலாம். நீதித்துறை மெத்தனமாக இருக்கிறது எனலாம். அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்க 20 ஆண்டுகள் ஆன பிறகும் கூட உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என பல வாதங்கள் இருக்கின்றன.

குற்றத்தை விசாரணை செய்யும் பிரிவு, அதற்கு தண்டனை கொடுக்கும் பிரிவு மற்றும் நீதித்துறை, மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்காததே இதற்கு காரணம்”.

இவ்வாறு முன்னாள் நீதியரசர் ஜெ. செல்லமேஷ்வர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *