போலி சான்றிதழ் பிரச்சனையில் தலைமறைவான தலைமை ஆசிரியர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்

போலி சான்றிதழ் கொடுத்து பணிக்குச் சேர்ந்து தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்மபுரி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி அடுத்த வெங்கடம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள். கடந்த 2001ல் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த இவர் 2017 ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். அதைத் தொடர்ந்து காரிமங்கலம் அருகே உள்ள மலை கிராமமான திம்மராயன அள்ளி அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்கும்படி பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இதில் 12 ஆம் வகுப்பு தேர்வை தனி தேர்வாக எழுதிய கண்ணம்மாள் 4 பாடங்களுக்கான தேர்வில் பங்கேற்கவில்லை. ஆனால், இந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் உமாதேவி மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து கண்ணம்மாள் தலைமறைவான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *