விவசாயிகள் போராட்டம்; டெல்லியில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்திய வேளாண் மக்கள்

மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாய பெருமக்கள் “எங்களது மனதின் குரலை கேளுங்கள்” என்று பிரதமர் மோடிக்கு கவன ஈர்ப்பு போராட்டத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு வானொலியில் “மனதின் குரல்” (மன் கி பாத்) என்ற தலைப்பில் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி “மனதின் குரல்” நிகழ்ச்சி நேற்று முன்தினம் (27-12-2020) ஒலிபரப்பப்பட்டது. அப்போது டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்திவரும் விவசாய பெருமக்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடக்க நிலையில் இருந்தபோது மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கொரோனா வைரசுக்கு எதிராக போராடிய சுகாதார பணிகளை உற்சாகப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் மணியோசை எழுப்ப வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

இதே பாணியை கடைபிடித்த விவசாய பெருமக்கள் நேற்று முன்தினம் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றும்போது நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஓசை எழுப்ப வேண்டுமென்று பல்வேறு விவசாய சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன‌.

இதன்படி டெல்லியில் முகாமிட்டு போராடி வரும் விவசாயிகள் நேற்று பாத்திரங்கள், தகரங்களைத் தட்டி ஓசை எழுப்பி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் தட்டு தவிர கைகளைத் தட்டியபடி அவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதேபோல பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ஓசை எழுப்பி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து ஹரியானா மாநில பாரதிய கிசான் கூட்டமைப்பின் தலைவர் குர்நாம் சிங் கூறும்போது, “புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களது மனதின் குரலையும் பிரதமர் மோடி கேட்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *