இந்தியாவிலேயே சிறைக் கைதிகளுக்காக சிறப்பு கோவிட் மய்யம் தமிழகத்தில் திறக்கப்பட்டது
இந்தியாவிலேயே கைதிகளுக்காக தமிழகத்தில்தான் சிறைச்சாலையில் சிறப்பு கோவிட் பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார். 144 சிறைக்கைதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் 99 கைதிகள் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனாவால் பாதிக்கப்படும் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆண்களுக்கான 3 வார்டுகள், பெண்களுக்கு 1 வார்டு என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையம் தண்டனை பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர்செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக இதுவரை புதியதாக 1 லட்சத்து 29 ஆயிரத்து 122 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1, 643 கோவிட் பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. சென்னையில் மட்டும் 54 கோவிட் பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. இந்தியாவிலேயே முதல்முறையாககைதிகளுக்காக புழல் சிறையில் சிறப்பு கோவிட் பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
புழல் சிறையில் ஆய்வகம், மருந்தகம், 108 ஆம்புலன்ஸ் என அனைத்து வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார். புழல் சிறையில் 114 கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 99 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.