ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கியது : தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து ஆலோசனை

ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடந்தது.

ஜி20 அமைப்புக்கு கடந்த டிசம்பர் 1-ம் தேதி இந்தியா தலைமை ஏற்றது. ஓராண்டுக்கு இந்தப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டை நடத்த உள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த ஓராண்டில் நாட்டில் உள்ள 55 நகரங்களில் 200 கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, முதல் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று தொடங்கியது. 4 நாட்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பிரதிநிதிகள், ஐ.நா., உலக வங்கி மற்றும் 9 விருந்தினர் நாடுகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்திய பிரதிநிதி அமிதாப் காந்த் இக்கூட்டத்தின் அனைத்து அமர்வுகளையும் வழிநடத்த உள்ளார்.

தொழில்நுட்ப பரிமாற்றம், பசுமை வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி இலக்கு (எஸ்டிஜி) உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. முதல் அமர்வில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் தொழில்நுட்ப மாற்றம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இரண்டாவது அமர்வில் பசுமை வளர்ச்சி மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கான வாழ்வியல் (லைப்) ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜி20-க்கான இந்திய பிரதிநிதி அமிதாப் காந்த் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “விருந்தோம்பலுக்கும் வரலாற்று சிறப்புக்கும் உலகப் புகழ்பெற்றது ராஜஸ்தான் மாநிலம். இவ்வளவு பெருமை வாய்ந்த இம்மாநிலத்தில், இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஜி20 பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருகை தந்துள்ள ஜி20 பிரதிநிதிகளை வரவேற்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதற்கான் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்” என்றார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *