40 ஆயிரத்தை கடந்தது ஒரு சவரன் தங்கத்தின் விலை; மேலும் உயரும் என நகை வியாபாரிகள் எச்சரிக்கை

ஒரு சவரன் தங்கத்தின் விலை புதிய உச்சமாக 40 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் தங்கத்தின் விலை இன்னும் உயர அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த விலையேற்றம் நுகர்வோரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 9ஆம் தேதி ஒரு சவரன் 37 ஆயிரத்து 747 விற்கப்பட்டது. அதன்பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இந்நிலையில் ஜூலை 20ந் தேதிக்குப் பிறகு தொடர்ந்து உயர்ந்தவாறே இருந்தது.

20ந் தேதி  ஒரு சவரன் தங்கம் 37 ஆயிரத்து 184க்கு விற்கப்பட்டது. 21ம் தேதி சவரன் 37 ஆயிரத்து 736 ரூபாய்க்கும், 22ம் தேதி ரூபாய் 38 ஆயிரத்துக்கும் 184க்கும், 23ந் தேதி ரூபாய் 38 ஆயிரத்து 776க்கும், 24ந் தேதி 39 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனையானது.

இப்படி தொடர்ந்து உச்சத்த்த் தொட்ட நிலையிவ், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை மேலும் உயர்ந்து ஒரு சவரன் 39 ஆயிரத்து 232க்கு விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இன்று காலை தங்க மாக்கெட் தொடங்கியதும் கிராமுக்கு ரூபாய் 74 அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 4 ஆயிரத்து 978க்கும் ஒரு சவரனுக்கு 592 அதிகரித்து 39 ஆயிரத்து 824க்கு விற்பனையானது. இது நுகர்வோரை பெரும் கவலையில் ஆழ்த்தியது.

இந்நிலையில் மாலை நிலவரப்படி கிரமுக்கு 109 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5013 என்ற உச்சத்தை தொட்டது. இதனால் சவரனுக்கு 872 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 40 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆக, கடந்த ஒரே வாரத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 2 ஆயிரத்து 488 ரூபாய் என்றளவில் உயர்ந்துள்ளது.

குறுகிய நாட்களில் இந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்தது இல்லை. தற்போதைய விலையை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் நுகர்வோர் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க தான் அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு காரணம் உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்று, அதனைத் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் பொது முடக்கம் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் சிதைந்திருக்கிறது. இதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் மற்ற துறைகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் தங்கத்தில் அதிக முதலீடு செய்வது அதிகரித்திருப்பதுதான் தங்கத்தின் விலை புதிய உச்சத்துக்கு செல்ல காரணம்.

இந்த விலையேற்றம் குறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், “தங்கத்தில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் வேறு எதிலும் முதலீடு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்தால் தான் தப்பிக்க முடியும் என்று பெரும் முதலீட்டாளர்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். இதுவும் தங்கம் விலை புதிய உச்சத்தை கடப்பதற்கு காரணம். இன்னும் தங்கம் விலை உயருவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *