குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் – அரியான முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவிப்பு

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய பாஜக அரசு அளிக்காவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு லட்சக்கணக்கான விவசாய பெருமக்கள் போராடி வருகிறார்கள். கடும் குளிரையும் பொருட்படுத்தாது இரவு பகல் 37 வது நாளை எட்டியுள்ளது விவசாயிகளின் போராட்டம்.

இந்த போரட்ட களத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கலாம் என்ற கூறப்படுகிறது. இதற்கிடையில் மத்திய பாஜக அரசுடனான நடைபெற்ற 6 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. அடுத்து வரும் 4 ந்தேதி நடைபெற இருக்கும் 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடையும் பட்சத்தில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாய சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.

இந்த போராட்டத்தில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகளின் பங்கு மிக முக்கியமானது. இதனால் அம்மாநிலத்தை ஆளும் பாஜக கூட்டணிக்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அரியானா மாநிலத்தை ஆளும் பாஜகவின் முதல்வர் மனோகர் லால் கட்டார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) உத்தரவாதத்தை உறுதிபடுத்த முடியாவிட்டால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். நான் எம்எஸ்பிக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து பாஜகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, அரியானா துணை முதல்வரும் ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சவுதாலா சில வாரங்களுக்கு செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ”நான் ஆட்சியில் இருக்கும் வரை, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுக்க அனுமதிக்கமாட்டேன். நான் அவ்வாறு செய்தால், அதே நாளில் நான் என் பதவியில் இருந்து விலகிவிடுவேன்” என்று தெரிவித்திருந்தார்.

டெல்லியில் போராடிவரும் விவசாய பெருமக்களின் போராட்டத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் மத்திய பாஜக அரசு மெத்தனமாக செயல்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்தச்சூழலில் அரியானா மாநிலத்தை ஆளும் பாஜக கூட்டணியில் முதல்வரும், துணை முதல்வரும குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் இருக்க வேண்டும் என்று கூறி பதவி விலகுவோம் என்று குறிப்பிட்டிருப்பது விவாதப் பொருளாகியுள்ளதோடு அரசியல் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *