“இந்தி தெரியாது போடா” சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்

“இந்தி தெரியாது போடா” என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தி திணிப்புக்கு எதிராக 1938ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற போராட்டம் வரலாற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் பெரும் எழுச்சியை உண்டாக்கியது.

அந்த எழுச்சி தான் தமிழகத்தில் மாபெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டது என்பது நிதர்சனம். திராவிட இயக்க அரசியல் வேரூன்றுவதற்கு இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் மிக மிக முக்கிய பங்காற்றியது எனலாம்.

தற்போது இந்தி திணிப்பை மத்திய பாஜக அரசு மீண்டும் கையிலெடுத்து நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் முனைப்போடு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அண்மையில் திமுக எம்பி கனிமொழி இந்தி தெரியாததால் சென்னை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட விவகாரத்தை வெளிகொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல் இயக்குனர் வெற்றிமாறன் தானும் இந்தி பிரச்சனையால் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய சுகாதார அமைச்சகம் நடத்திய மருத்துவர் கருத்தரங்கில் இந்தி தெரியாதவர்கள் வெளியே செல்லலாம் என்று அந்த அமைச்சக செயலாளர் கூறியிருந்தது மிகப் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவங்கள் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு இந்தி திணிப்புக்கு எதிராக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘I am a தமிழ் பேசும் Indian’ டீ சர்ட் அணிந்தபடி நிற்க, அவருடன் மெட்ரோ பட நாயகன் ஷிரிஷ்  “இந்தி தெரியாது போடா” என்ற டி-ஷர்ட்டையும் அணிந்திருக்கிறார்.

இந்த நிழல் படத்தை யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டது இணையதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அவரைத் தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக பல திரைப்பட பிரபலங்களும் ‘I am a தமிழ் பேசும் Indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் அமைந்துள்ள டீஷர்ட்களை அணிந்து அவர்களின் நிழல் படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் சமூக வலைதளங்களில் “இந்தி தெரியாது போடா” என்ற ஹஸ்டக் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ‘I am a தமிழ் பேசும் Indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் அமைந்துள்ள டீஷர்ட்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *