கொரோனா நெருக்கடி : எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோய் மரணங்கள் அதிகரிக்கும் – ஆய்வில் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் எச்ஐவி (எய்ட்ஸ்), மலேரியா மற்றும் காச நோய் போன்றவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து “லான்செட் குளோபல் ஹெல்த்” அறிவியல் இதழில் வெளியான ஆய்வு தொடர்பான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரையில், “கொரோனா நோய்த் தொற்றால், பிற நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, லண்டன் இம்பீரியல் கல்லூரி நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் ஹெச்ஐவி, காசநோய் மற்றும் மலேரியா போன்ற நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கொரோனா நெருக்கடி காரணமாக மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த நாடுகளில் எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களுக்கு பலியாவோரின் எண்ணிக்கை இதுவரை இருந்ததை விட 10 முதல் 36 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எச்ஐவியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடும், காச நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கும் அந்த ஆய்வு முடிவுகள், மலேரியா நோய் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 36 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

என்றாலும் எச்ஐவி தீநுண்மியின் தீவிரத்தை தடுப்பதற்கான மருந்துகளின் விநியோகம் தடைபடாமல் பாதுகாப்பது, காசநோய் உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையை உடனடியாக தொடங்குவதில் இடர்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, மலேரியாவை முன்கூட்டியே தடுப்பதற்காக கொசு வலைகள் வழங்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு தொய்வு ஏற்படாமல் கவனித்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் இந்த அபாயத்திலிருந்து தப்பலாம் என்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.”

இவ்வாறு அந்த ஆய்வு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *