“உ.பியின் கொரோனா நிலை குறித்து பேசினால் ‘தேசத்துரோகி’ ஆக்கப்படுவேன்” – யோகி அரசை சாடிய பா.ஜ.க எம்.எல்.ஏ

உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க அரசு போதிய சுகாதார கட்டமைப்பை ஏற்படுத்தாததால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மயானங்களில் சடலங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன. கொரோனா மரணங்களைக் குறைத்துக் காட்டுவதற்காகச் சடலங்கள் கங்கையில் வீசப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனாவால் இறப்பவர்களின் சடலங்களை மரியாதையுடன் நடத்துங்கள் என யோகி ஆதித்யநாத் அரசுக்கு மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தளவுக்கு உத்தர பிரதேசத்தின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.

இந்நிலையில், மாநிலத்தின் கொரோனா நிலை பற்றி கூறினால் என் மீது தேசத்துரோகி முத்திரை குத்தப்படும் என பா.ஜ.க எம்.எல்.ஏவே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், சீதாபூரைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏவான ராகேஷ் ரத்தோரிடம் செய்தியாளர்கள் கொரோனா நிலவரம் குறித்து கேள்வி கேட்கிறார்கள். அதற்கு பதிலளித்த அவர், “எங்கள் நிலை எப்படி உள்ளது என்றால், நாங்கள் எம்.எல்.ஏக்கள். நாங்கள் அதிகம் பேசினால், தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நான் இனி பேசாமல் இருப்பது நல்லது.

எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. இதைவிட வேறு எதுவும் சிறப்பாக இருக்க முடியாது. நான் அரசாங்கம் அல்ல, ஆனால் அரசாங்கம் சொல்வதைச் சரியானது என்று உங்களுக்கு சொல்ல முடியும்” என கூறியுள்ளார்.

முதல் கொரோனா அலையின்போதே, ராகேஷ் ரத்தோர் “கைதட்டுவதன் மூலம் நீங்கள் கொரோனா வைரஸை ஒழித்துவிடுவீர்களா?” என கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *