இசைஞானி இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோவில் ஒருநாள் அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

இசைஞானி இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அரங்கத்தில் தியானம் செய்யவும், அவரது பொருட்களை எடுத்துக் கொள்ளவும் ஒருநாள் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா தனது இசைக் கோர்ப்பு பணிகளை பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அரங்கில் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அந்த அரங்கை வேறு பயன்பாட்டுக்கு இளையராஜாவுக்கு தெரியப்படுத்தாமல் பிரசாத் நிருவாகம் மாற்றியது. இதனால் பிரசாத் நிருவாகத்துக்கும், இளையராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக இளையராஜா தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் தன்னுடைய விலைமதிக்க முடியாத இசைக்குறிப்புகள், கருவிகள், விருதுகள் எல்லாம் தான் பயன்படுத்திவந்த அரங்கில் வைத்திருந்ததாகவும், அதை எடுத்துக்கொள்ள அனுமதிக்க பிரசாத் ஸ்டுடியோ நிருவாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்தார். மேலும், பயன்படுத்திய இடத்தில் ஒருநாள் தியானம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்றும் இளையராஜா தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார் இளையராஜாவை ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்கும்படியும், இருதரப்பினரும் சமரசமாக போகும்படியும் கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து இளையராஜா தரப்பும் பிரசாத் ஸ்டூடியோ நிருவாகத் தரப்பும் சம்மதம் தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இசைஞானி இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி எஸ் ராமன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார்.

பின்னர் நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், “பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா பல ஆண்டுகள் பயன்படுத்தி வந்த அரங்கத்தில் அவரை ஒரு நாள் அனுமதிக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜா அங்கு இருக்கலாம்; தியானம் செய்யலாம். அதேநேரம் தன்னுடைய பொருள்களை எடுத்து கொள்ள வேண்டும். 4 மணிக்கு மேல் ஒரு போதும் அங்கு இருக்கக் கூடாது.

இளையராஜா அங்கு இருக்கும் போது வேறு யாரும் அங்கு செல்லக்கூடாது. இருதரப்பினரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளக் கூடாது. இதற்காக வழக்கறிஞர் வி. லட்சுமி நாராயணனை வழக்கறிஞர் ஆணையராக நியமிக்கிறேன். இவரிடம் தான் இருதரப்பினரும் பேசிக் கொள்ள வேண்டும்.

எந்த நாளில் இளையராஜா அங்கு செல்வது என்பது குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் கலந்துபேசி முடிவு செய்ய வேண்டும். அதற்கு தகுந்த பாதுகாப்பை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் வழங்க வேண்டும்.

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் ரூபாய் 50 லட்சம் கேட்டு இளையராஜா தொடர்ந்த வழக்கு, காவல்துறையில் கொடுத்த புகார்கள் அனைத்தும் முடித்து வைக்கப்படுகிறது”.

இவ்வாறு நீதிபதி சதீஷ்குமார் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *