“தமிழகத்தில் 120 உழவர் சந்தைகள் திறக்கப்பட உள்ளன” – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி

“தமிழகத்தில் புதிதாக 120 க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் திறக்கப்பட உள்ளன; பண்ருட்டி பலாப்பழங்களை விவசாயிகள் தடையின்றி சென்னை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட பிறகு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சென்னை தேனாம்பேட்டை யில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். பூங்கா வளாகத்தில் மகாகனி (swietenia mahagoni) மரக் கன்று ஒன்றை நடவு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது, “முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மக்கள் எதிர்பாராத பல சலுகைகளையும் வழங்கி வருகிறார். 2010 ல் முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ரூ.8 கோடி அளவில் 7.92 ஏக்கரில் சென்னையில் செம்மொழி பூங்காவை, கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் நினைவாக உருவாக்கினார்.

சென்னையில் மக்கள் நெருக்கடி மிகுந்த நிலையில் இது போன்ற பூங்காக்கள் தேவை. தோட்டக்கலை மூலம் 24 பூங்காக்கள் தமிழகம் முழுவதும் அமைந்துள்ளன , இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 78 விதை நாற்றுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 18 லட்சம் ஹெக்டேர் பகுதிகள் தோட்டக் கலைத்துறை மூலம் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் சரியாக பாராமரிக்கப்படாத நிலையில் அவற்றை சரியாக பராமரிப்பதுடன் தமிழகத்தில் 120 க்கும் மேற்பட்ட புதிய உழவர் சந்தைகளை திறக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

‘ அட்மா ‘ திட்டத்தில் பணி செய்த வேளாண் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக துறை ரீதியாக ஆய்வு நடத்தி பின்னர் முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதல்வர் , சொன்னதை செய்வார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் புதிய வேளாண் சட்டங்களை தடை செய்வது தொடர்பாக ஆராய்ந்து முடிவு செய்யப்படும்.

பலாப்பழங்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பண்ருட்டி பலாப்பழங்களை விவசாயிகள் தடையின்றி சென்னை கொண்டு வருவதற்கு போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மும்முனை மின்சாரத்திற்கு விண்ணப்பித்து காத்துள்ள விவசாயிகளுக்கான விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

8 வழிச்சாலை , ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் அவற்றுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கிறது ” என்று கூறினார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *