5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த இந்திய வங்கிகள்

மார்ச் 2022 உடன் முடிவடைந்த 5 ஆண்டுகளில், இந்திய வங்கிகள் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்களைத் தள்ளுபடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறையில் 6.1 சதவீதம் ஆகும்.

`தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு இந்திய ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. அதில், “மார்ச் 2022 உடன் முடிவடைந்த கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகள் தங்கள் செயல்படாத கடன்களை, 10 லட்சத்து 9 ஆயிரத்து 510 கோடி ரூபாய் அளவிற்கு தள்ளுபடி செய்துள்ளன” என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த தொகையில் இதுவரை 13 சதவிகிதத்தை மட்டுமே, அதாவது ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 36 கோடியை மட்டுமே திரும்ப வசூலித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

2022-23 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மதிப்பிடப்பட்ட மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.16 லட்சத்து 61 ஆயிரம் கோடிகளாகும். இதில், கடந்த 5 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையான ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 510 கோடி என்பது 61 சதவிகிதம் ஆகும். அதாவது தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையைக் கொண்டு. நாட்டின் நிதிப் பற்றாக்குறையில் 61 சதவிகிதத்தை குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வங்கிகள் தள்ளுபடி செய்த கடன் தொகை ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 510 கோடியில், பொதுத்துறை வங்கிகளின் வங்கிகள் பங்கு மட்டும் 73 சதவிகிதமாக உள்ளது. ரூ.7 லட்சத்து 34 ஆயிரத்து 738 கோடியை பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன.

தள்ளுபடி செய்யப்பட்டதோடு, எல்லாம் முடிந்துவிடவில்லை. தற்போதும் வங்கித் துறையின் மொத்த செயல்படாத சொத்து மதிப்பு(NPA) ரூ.7 லட்சத்து 29 ஆயிரத்து 388 கோடி அளவிற்கு உள்ளது. இது வங்கிகளின் மொத்த டெபாசிட் தொகையில் 5.9 சதவிகிதம் ஆகும். இது 2017-18 இல் 11.2 சதவிகிதமாக இருந்தது. இடைப்பட்ட 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி அளவிற்கான கடன்களை `தள்ளுபடி’ செய்ததன் மூலம், செய்யபடாத சொத்து மதிப்பு(என்பிஏ) `குறைக்கப்பட்டு’ உள்ளது. இந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் `தள்ளுபடி’ மூலமாக ரூ.13 லட்சத்து 22 ஆயிரத்து 309 கோடி என்பிஏ `குறைக்கப்பட்டு’ உள்ளது.

இந்த கடன் தள்ளுபடி மூலம் பெருமளவு ஆதாயம் அடைந்தவர்கள் நிச்சயமாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களாக இருக்க மாட்டார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஒரு வங்கியால் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவுடன், அது வங்கியின் சொத்து புத்தகத்தில் இருந்து வெள்யேறி விடும். கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய பிறகு, திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று முடிவுக்கு வரும் கடனளிப்பவர்(வங்கி) அதன்பின், செலுத்தாத கடனை அல்லது சொத்துக்களை, சொத்துகளின் பக்கத்திலிருந்து நகர்த்தி, அந்தத் தொகையை இழப்பாக காட்டுவார். அசல் அல்லது வட்டி செலுத்துதல் 90 நாட்களுக்கு தாமதமாக இருக்கும் போது கடன் செயல்படாத சொத்தாக ஆக மாறும், திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் தொலைவில் இருக்கும்போது ஒரு வங்கி அதை தள்ளுபடி செய்கிறது. இதற்கு பிறகு வங்கிகள் பல்வேறு விருப்பங்களைப் பயன்படுத்தி கடனை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும்.

இந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில், தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் இருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 36 கோடியை மட்டுமே வங்கிகள் திரும்ப வசூலிக்க முடிந்துள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *