ஜம்முவில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுலுடன் காஷ்மீரி பண்டிட்கள் சந்திப்பு: பாஜக அரசால் சந்திக்கும் அவலங்களை விளக்கினர்

ஜம்முவில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் இடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை காஷ்மீரி பண்டிட்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, தீவிரவாதிகளால் குறிவைத்து கொல்லப்படும் அவலங்களையும், அதன் விளைவாக பணியிட மாற்றம் கோரி போராடும் அரசு பணியாளர்களின் பிரச்னைகள் குறித்து விவரித்தனர். நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரை, இறுதி கட்டத்தை நோக்கி கடந்த 20ம் தேதி ஜம்முவில் நுழைந்துள்ளது. அங்கு, ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலையில் அமைந்தள்ள சம்பா மாவட்டத்தின் விஜய்பூரில் நேற்று காலை 7 மணிக்கு நடைபயணத்தை ராகுல் தொடங்கினார். ஏராளமானவர்கள் திரண்டு நடைபயணத்தில் பங்கேற்றனர்.

இதற்கிடையே, ஜம்முவில் வசிக்கும் இந்துக்களான காஷ்மீரி பண்டிட்கள் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்தும், காஷ்மீரி பண்டிட்களின் போராட்டம் குறித்தும் ராகுலிடம் விளக்கம் அளித்தனர். ராகுலை சந்தித்த பிரதிநிதிகளில் ஒருவரான சமூக ஆர்வலர் அமித் கோயல் அளித்த பேட்டியில், ‘‘ராகுலுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. எங்களின் பிரச்னைகள் குறித்து அவரிடம் விளக்கினோம். குறிப்பாக, மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அரசு பணி வழங்கப்பட்டவர்களின் போராட்டம் குறித்து பேசினோம். இந்த போராட்டத்தால் கடந்த 6 மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதைத் தொடர்ந்து ராகுல், சத்வாரி பகுதியில் பேசுகையில், ‘இந்த அரசு, காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு அநீதி இழைத்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பண்டிட்களைப் பார்த்து ‘பிச்சை எடுக்கக் கூடாது’ என காஷ்மீர் ஆளுநர் கூறியிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். காஷ்மீரி பண்டிட்கள் பிச்சை கேட்கவில்லை. அவர்களின் உரிமையை கேட்கிறார்கள். ஆளுநர் தனது பேச்சுக்காக நிச்சயம் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்’ என்றார். கடந்த ஆண்டு மே 12ம் தேதி ராகுல் பட் எனும் காஷ்மீரி பண்டிட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரி பண்டிட்கள் மீது தீவிரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவத்தை தொடர்ந்து, காஷ்மீரில் பணியாற்றிய பண்டிட்கள் தங்களை ஜம்முவுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி தனது திருமணம், பிடித்த உணவுகள் பற்றி அரசியல் தாண்டிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ராகுல் கூறுகையில், ‘‘திருமணத்திற்கு எதிராக எனக்கு எந்த கருத்தும் கிடையாது. பிரச்னை என்னவென்றால், எனது பெற்றோரின் திருமணம் உண்மையிலேயே மிக அழகாக இருந்தது. அவர்கள் ஒருவரையொருவர் முழுமையாக காதலித்தனர். அதனால் தான் எனக்கான எதிர்பார்ப்புகள் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. சரியான பெண் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அறிவான அன்பான நபரையே மணக்க விரும்புகிறேன். உணவைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். கிடைப்பதை உண்பேன். வீட்டில் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவேன்’’ என்றார்.

பாஜக குற்றச்சாட்டுக்கு பண்டிட்கள் பதிலடி: காஷ்மீரி பண்டிட்களுடனான ராகுலின் சந்திப்பு வெறும் அரசியல் நாடகம் என பாஜவினர் குற்றம்சாட்டினர். இது குறித்து ராகுலை சந்தித்த பிரதிநிதிகளில் ஒருவரான ஜிதேந்திர கச்ரு கூறுகையில், ‘‘ராகுல் மிகவும் எளிமையான மனிதர். அவர் எங்கள் பிரச்னைகளை பொறுமையுடன் கேட்டார். காஷ்மீரி பண்டிட்களின் பிரச்னையை தீர்க்க வேண்டுமென பாஜ உண்மையிலேயே நினைக்கவில்லை. ஏனெனவில் அவர்கள் மதத்தின் அடிப்படையில் வெறுப்பை பரப்பும் அரசியலை செய்கின்றனர்’’ என்றார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *