குற்றவாளிப் பட்டியலிலுள்ள பெண் தாதாவுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கும் பாஜக

காவல்துறையின் குற்றவாளிப் பட்டியலில் உள்ள வடசென்னையைச் சேர்ந்த பிரபல பெண் தாதாவுக்கு பாஜகவில் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பதவி  வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக தலைவராக எல். முருகன் பதவியேற்றதிலிருந்து மார்க்கெட் இழந்த திரை பிரபலங்கள் பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அதேபோல காவல்துறையால் தேடப்படும் பல ரவுடிகளும், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களும், கந்துவட்டி செய்பவர்களும் தங்களை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

ஏற்கனவே பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வடசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜகவில் இணைந்தார். அவர் இணைந்தது பாஜகவில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள் ஆக மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி டோக்கன் ராஜா, ஈசிஆர் பகுதியைச் சேர்ந்த சங்கர் உள்ளிட்ட பல ரவுடிகள் பாஜகவில் இணைந்தனர். அவரைத் தொடர்ந்து படப்பையில் பிரபல ரவுடியாக உள்ள படப்பை குணாவும் பாஜகவில் இணைவதாக இருந்தது. அதற்குள் அவரைக் காவல்துறையினர் கைது செய்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில் வடசென்னையில் புளியந்தோப்பு மற்றும் பேசின் பிரிட்ஜ் பகுதிகளைக் கலக்கிய பிரபல பெண் தாதா புளியந்தோப்பு அஞ்சலை என்பவர் பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் இணைந்ததும் அவருக்கு கட்சியில் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது வடசென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணித் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தாதா புளியந்தோப்பு அஞ்சலை மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, கந்துவட்டி வழக்கு என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்தோடு காவல்துறையின் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலிலும் அவரது பெயர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புளியந்தோப்பு அஞ்சலைக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சென்னையில் பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி கலக்கி வருகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *