மக்கள் சிரமப்படாமல் காக்கும் பெரிய பொறுப்பு உள்ளாட்சி அமைப்புக்கு உள்ளது -அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் இராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கொரோனா தொற்று மற்றும் முழு ஊரடங்கால் சிரமப்படக்கூடிய மக்களுக்கு எந்தெந்த வகைகளில் உள்ளாட்சி பிரதிநிகள் மூலம் உதவலாம் என ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதுடன், அதற்கான நிவாரண நடவடிக்கை எடுப்பதிலும், அனைத்து இடங்களிலும் பிரச்சனை இல்லாமல் மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதிலும், நோய் தொற்றின் வேகத்தையும் எண்ணிக்கையையும் குறைக்கவும், குறிப்பாக இறப்பு சதவிகிதத்தை கட்டுக்குள் வைக்கவும், சரியான நேரத்தில், சரியான சிகிச்சை அளிக்கவும் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.

ஊரடங்கு காலத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பங்களிப்பும், அவர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் ஊரடங்கின் வெற்றி, பொதுமக்களுக்கு சிறு சிறு சிரமங்களை ஏற்படுத்தினாலும், பெருவாரியான பிரச்சனைகளை முன்னின்று தீர்த்து, யாரும் மிகப்பெரிய துயரங்கள், சிரமங்கள் அடைந்து விடாமல், அவர்களை காப்பாற்றக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளதாக பேசினார்.

 

பின்னர் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களை கொரோனா பரிசோதனைகளையும், தடுப்பூசி அதிகம் போடுவதையும் முன்னின்று வழி நடத்திட வேண்டும். முழு ஊரடங்கில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தோட்டக்கலைதுறை மூலமும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமும் அவரவர் பகுதிகளுக்கே வரவும் நியாயமான விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விற்பனைக்கு வரும் பிரதிநிகளும் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்றுடன் தான் வருவார்கள் என்றும் பேசினார்.

இக்கூட்டத்தில், தென்காசி எம்.பி தனுஷ் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன் தங்கபாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *