சொல்வது மேக் இன் இந்தியா…! வாங்குவது சீனாவிலிருந்தா..? – ராகுல்காந்தி

“இந்தியாவில் பாஜக ஆட்சியின் போது சீனப் பொருள்கள் இறக்குமதியாவது அதிகரித்துள்ளது” என விளக்கப்படத்துடன் மோடியை விமர்சித்துள்ளார் ராகுல்காந்தி

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர், இந்தியாவின் பாதுகாப்பு படை வீரர் மீது நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பாஜக ஆதரவாளர்கள் சீன பொருட்களை உடைப்பது, எரிப்பது என தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அப்படி அவர்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டங்களை சீன நிறுவனம் தயாரித்த செல்பேசியில் வீடியோ எடுத்து சீனாவை சேர்ந்த டிக் டாக் செயலிலேயே அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து வந்தனர்.

இதனையடுத்து நேற்று இரவு (ஜூன் 29) சீனாவைச் சேர்ந்த டிக் டாக், ஹலோ, ஷேர் இட் போன்ற 59 செயல்களுக்கு தடை விதித்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த பரபரப்பான நேரத்தில் இந்தியாவின் எல்லைப் பகுதியில் ஊடுருவி, அந்தப் பகுதி தன்னுடையது என சொந்தம் கொண்டாடி, நமது ராணுவத்தினர் கொன்று குவித்த சீனாவிற்கு வெறும் செயலிகளை தடை செய்வதுதான் பாஜக அரசின் அதிரடி எதிர்ப்பா..? என்று எதிர்க் கட்சிகள் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் சீனப் பொருள்கள் இந்தியாவில் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது என்பதை விளக்கப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் அதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சீன பொருட்களின் விகிதம் வெறும் 14 விழுக்காடு ஆகவே இருந்தது என்றும், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரையில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசின் போது 18 விழுக்காட்டுக்கும் அதிகமான சீன பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உண்மைகள் எப்போதும் பொய் சொல்வதில்லை “மேக் இன் இந்தியா“ என்று பேசி ஆட்சிக்கு வந்த மோடியின் பாஜக அரசு தற்போது சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதையே நித்தமும் செய்தி வருகிறது என ராகுல் காந்தி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *