கொரோனா கொடை : 43 விழுக்காடு மக்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்; இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 43 விழுக்காடு மக்கள் மன அழுத்தத்தில் உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் இந்தியாவில் திடீர் மன அழுத்தத்தால் 43 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த பொதுமுடக்கத்தால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு வீடுகளில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டனர். நீண்ட நாட்களாக வீடுகளிலேயே முடங்கிக் கிடந்ததால் பொதுமக்கள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்தில் சிக்கி உள்ளதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் இந்தியா முழுவதும் 10 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் 43 விழுக்காடு மக்கள் மன அழுத்தத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வு தரவுகளின்படி 27 விழுக்காட்டினர் லேசான மனச்சோர்விலும், 11 விழுக்காட்டினர் மிதமான மனச்சோர்வும் 6 விழுக்காட்டினர் கடுமையான மன அழுத்தத்திலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 5 மாத காலங்களில் திடீரென ஏற்பட்ட வாழ்நிலை மாற்றம், வேலை இழப்பு, வருமான இழப்பு, உடல்நிலைக் காரணங்கள் போன்றவை மன அழுத்தத்திற்கான முக்கிய காரணங்களாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *