மனு கொடுக்க சாலையில் நின்றவர்களை கோட்டைக்கு வரச் சொன்ன முதலமைச்சர்… காத்திருந்த ஆசிரியர்கள் நெகிழ்ச்சி


சாலையில் காத்திருந்திருந்த ஆசிரியர்களை பார்த்ததும், காரை நிறுத்தி கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகம் வந்து தன்னை சந்திக்குமாறு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு அரசின் ‘கல்வி’ தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அதனுடன் மாணவர்களுக்கான பாடநூல்கள் வழங்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகின்றன. இது தவிர ‘கல்வி’ தொலைக்காட்சி மூலமாக தொலைக்காட்சிகளில் வகுப்புகள் நடக்கின்றன.
தற்போது ‘கல்வி’ தொலைக்காட்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான புதிய பாடங்களுக்கான வகுப்புகள் கல்வித் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்களை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அண்ணா நுற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டுத் திரும்பும்போது காந்தி மண்டபம் சாலையில் காத்திருந்த ஆசிரியர்களைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொல்லி, மனுவைப் பெற்றார்.
அவர்களது கோரிக்கை மனுவை பெற்றதைத் தொடர்ந்து ஆசிரியர்களிடம், “சாலையில் ஏன் காத்திருக்கிறீர்கள்? தலைமைச் செயலகத்தில் என்னை வந்து பாருங்கள்” என அறிவுறுத்தினார்.
காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாங்கள் நிற்பதைப் பார்த்ததும் காரை நிறுத்தி மனுவைப் பெற்றதும், தன்னை சந்திக்க வரச் சொன்னதும் காத்திருந்த ஆசிரியர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published.