மக்கள் எதிர்பார்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவார் புதிய முதல் அமைச்சர்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

சவால்கள் சூழ்ந்து நிற்கும் கால கட்டத்தில் ஆட்சிப் பொறுப்பு ஏற்கிறார் தளபதி மு.க. ஸ்டாலின்; மக்கள் எதிர்பார்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவார் புதிய முதல் அமைச்சர் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

சவால்கள் சூழ்ந்துள்ள ஒரு காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தளபதி மு.க.ஸ்டாலின் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். கொரோனாவை மக்கள் இயக்கமாக செயல்பட்டு முறியடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “செயலாக்கத்தைப் புயல் வேகத்தில் செய்து முடிக்கும் மாபெரும் ஆளுமைக்கு மறுபெயர் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் தளபதி மு.க.ஸ்டாலின் என்பதாகும் என்று உலகுக்கு நிரூபிக்கும் வகையில், 7ஆம் தேதி முதல்வர் – அமைச்சரவை பதவியேற்கவிருந்தாலும்கூட, நான்கு நாட்கள் முன்பாகவே – அதாவது, தேர்தல் முடிவு வந்த மறுநாளே, 3ஆம் தேதியே, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், காவல்துறை தலைமை அதிகாரி ஆகியவர்களோடு தனது இல்லத்தில் கொரோனா – கொடுந்தொற்றின் இரண்டாம் அலையின் வீச்சினைத் தடுத்து, மக்களை எப்படிக் காப்பாற்றுவது, என்னென்ன தடுப்பு வழி முறை நெறிகளை உருவாக்குதல் என்று சுமார் ஒரு மணி நேரத்திற்குமேல் யோசித்து, 6ஆம் தேதி முதல் பலவித கட்டுப்பாடுகளை ஏற்க மக்களுக்கு அறிவுறுத்தி, மக்கள் நலப் பாதுகாப்புக்கான அரண் அமைக்கும் காவலராக மாறிவிட்டார் – முதல்வராகப் பொறுப்பேற்கும் முன்பே நமது தளபதி!

இந்தச் செயலூக்கச் செம்மலை நோக்கியுள்ள பிரச்சினைகள் ஆயிரமாயிரம் காத்து வரிசையில் நிற்கின்ற நிலையில், முதல் முன்னுரிமை – கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற அனைத்து வழிமுறைகளையும் அவர்களது ஆதரவுடன் செய்து முடிக்கும் பெரும் சுமையான சுகத்தைத் தன் தோளில் சுமத்திக் கொண்டே முதல் அமைச்சர் பதவியேற்க இருக்கிறார் செயல்வீரச் சிங்கமான இவர்!

இன்றைய சூழலில், கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்தி, ஒழிக்கும் பணி சாதாரண பணி அல்ல; எதிர் கொள்ளும் மிகப் பெரிய சவால் ஆகும்!

மனிதர்தம் அறிவு, ஆளுமை, ஆற்றல், பகுத்தறிவு, விருப்பு, வெறுப்பற்ற ஆட்சித் திறன் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் உரிய தீர்வைக் காண முடியும் என்பது அறிவியல் போதிக்கும் பாடம் ஆகும்!

எனவே, மனந்தளராமல் மக்களுக்கு அச்சத்தைப் போக்கி, அலட்சியத்தை தலைதூக்காமல் செய்து, இதை ஒரு மக்கள் இயக்கமாக்கிடுதல் இந்த கால கட்டத்தில் மிகவும் அவசர அவசியமாகும்!

எளிமையான கொரோனா தடுப்பு – மக்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அதைப்பற்றி போதிய கருத்து ஊக்கக் கட்டுப்பாடு, நம் மக்கள் மத்தியில் பரவாததினாலேயே கொரோனா தொற்று வீச்சு அதன் வேகத்தைக் காட்ட முடிகிறது.

கொரோனா தடுப்புக்கு வழிகள் என்ன?

  1. முகக் கவசத்தை அணியாமல் இருக்கக் கூடாது – தனியே உண்ணும்போதும், உறங்கும் போதும் தவிர, எல்லா நேரங்களிலும் முகக்கவசம் நம் பாதுகாப்புக்கு ஆன முக்கிய கருவி என்ற உணர்வினை ஒரு மாபெரும் பிரச்சார இயக்கமாக அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் – அனைவரும் பங்கு பெறும் மாபெரும் மகத்தான மக்கள் இயக்கமாக மாற்றிடும் உறுதியும் உத்வேகமும் நம் ஒவ்வொருவரிடமும் காண வேண்டும்!

இதைவிட எளிய வாய்ப்பு – கொரோனா தடுப்பு வேறு என்ன?

  1. அதுபோலவே தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கவே கூடாது. மருத்துவர்கள் சில குறிப்பிட்ட நபர்களின் தனித்த உடல் நிலை காரணமாக மறுப்பு கூறுவது தவிர, மற்ற அத்துணை வயதுக்காரர்களும் அதிலும் குறிப்பாக 18 வயது முதற்கொண்டே இதனை வருமுன்னர் காக்கும் வழிமுறை தடுப்பு சிகிச்சையாக ஆக்கிக் கொண்டு செயல்பட வேண்டும்.

தடுப்பூசி தட்டுப்பாடுகள் இன்றி கிடைக்க மாநில அரசின் இயந்திரம் மிக வேகமாக முடுக்கிவிடப்படல் வேண்டும்.

கூட்டம் கூடுதல், தனி நபர் இடைவெளியைக் கைவிடுதல் போன்றவற்றைத் தவிர்த்து சமூகச் சிந்தனையோடும் பொறுப்புணர்வோடும் ஒவ்வொருவரும் செயல்பட்டு, முதல்வருக்கும் ஆட்சிக்கும், அதிகாரிகளுக்கும் நாம் ஒத்துழைப்பை நல்க வேண்டும். அது பிறருக்காக அல்ல; நமக்காக நமது உறவுகளுக்காக – நாட்டுக்காக! மறவாதீர் – செயல்படத் துவங்குவீர்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *