காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி வெட்கி தலைகுனிய வேண்டிய பெருத்த அவமானம் – மு.க.ஸ்டாலின்

“ஒரு காவல் நிலையத்தை நிர்வகிக்க முடியாமல் தோல்வியடைந்த – காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமாக கொலைகளை, உடல்நலக்குறைவால் மரணம்” என்று மனசாட்சி இல்லாமல் மறைத்த பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்” என திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கு விசாரணையை உடனடியாக சிபிசிஐடி மேற்கொள்ள வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மாண்புமிகு நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு, கணவரையும் – மகனையும் இழந்து நிற்கும் அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி. இந்த வழக்கினை விசாரணை செய்ய சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்ற நீதிபதியை, முதலமைச்சர் பழனிச்சாமியின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் நேற்றையதினம் மிரட்டியிருப்பது “பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்பதை நினைவுபடுத்துகிறது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைப் பதிவாளரிடம் கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் 29-06-2020 மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள அறிக்கை – ஒரு நீதித்துறை நடுவருக்கு காவல்நிலையத்தில் இந்தக் கொடுமை என்றால், ஜெயராஜையும், பென்னிக்சையும் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தியிருப்பார்கள்; எப்படியெல்லாம் விடிய விடிய லத்தியால் அடித்து துன்புறுத்தியிருப்பார்கள் என்பதை நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

கோவில்பட்டி கோவில்பட்டி நீதிமன்ற நடுவர் இன் அறிக்கையில்,

  1. “காவல் நிலையத்தில் இருந்த குமார் கூடுதல் டிஎஸ்பி எவ்வித முறையான வணக்கமும் செய்யாமல், தனது உடல் பலத்தை காட்டுவதற்கான உடல் அசைவுகளுடன் மிரட்டும் தொனியிலான பார்வையுடனும் உடல் அசைவுகளுடன் நின்றார்.
  2. காவல் நிலைய பொது நாட்குறிப்பேடு மற்றும் இதர பதிவேடுகளை கேட்டபோது அவற்றை சமர்ப்பிக்கவில்லை.
  3. அங்குள்ள சி.சி.டி.வி ஹார்ட்டிஸ்க் தினப்படி தானாகவே அழிந்து போகும் அளவிற்கு ஏற்பாடு (settings) செய்யப்பட்டிருந்தது.
  4. சம்பவம் நடைபெற்ற 19-06-2020 தொடர்பான காணொளிப் பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தன.
  5. நீதிமன்ற ஊழியர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் அங்கு நின்ற காவலர்கள் கிண்டல் செய்த காரணத்தால், சம்பவ இடத்தில் சாட்சியத்தை பதிவு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
  6. விடிய விடிய லத்தியால் அடிக்கப்பட்டு – லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறை படிந்துள்ளது.
  7. லத்தி விலையை கொடுக்கும்படி கூறியும் அங்கிருந்த காவலர்கள் காதில் ஏதும் விழாதது போல் இருந்தார்கள். மகாராஜன் என்னை பார்த்து “உன்னால ஒன்னும் புடுங்க முடியாது டா” என்று கூறினார். லத்தியைக் கேட்டபோது “வரேன் இரு” என்று ஒருமையில் பேசினார்.
  8. காவலர்கள் சூழ்ந்து கொண்டு நடக்கும் நிகழ்வுகளை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டும், நீதிமன்ற ஊழியர்களை மிரட்டி கொண்டும் இருந்தார்கள்”

என்று இடம்பெற்றுள்ள அதிர்ச்சி தரும் வரிகள் நீதிபதியையே அதிமுக ஆட்சியில் மிரட்டுவார்கள் என்பதற்கான சாட்சியமாக அமைந்துள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மாண்புமிகு நீதியரசர்கள், “நீதித்துறை நடுவர் விசாரணை செய்வதைத் தடுப்பதற்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுகிறது” என்று தாங்களாகவே முன்வந்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி வெட்கி தலைகுனிய வேண்டிய பெருத்த அவமானம்.

கூடுதல் டிஎஸ்பி என்பவர் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட அளவிலான அதிகாரி. அவர் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு எப்படி சென்றார்?

உயர் நீதிமன்றம் அனுப்பிய ஒரு நீதிபதியை ஒரு காவலர் தானாகவே மிரட்டினார் என்பதை எப்படி நம்புவது?

மன உளைச்சல் இருந்தால் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாமா?

இந்த மிரட்டல் – உருட்டல், ஆவணங்கள் தர மறுப்பு, காவல்நிலையத்தில் கொலைக்கான சாட்சியங்கள் அழிப்பு ஆகிய அனைத்தும் கூடுதல் டிஎஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் அளவில் முடிவு எடுத்து அரங்கேற்றப்பட்டவை என்பதை நம்ப முடியாது.

உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்கும் ஒரு வழக்கில், துறை அமைச்சரான முதலமைச்சர் பழனிசாமிக்குத் தெரியாமல் இவை அனைத்தும் நடந்து விட்டன என்பதைத் துளியும் நம்ப முடியவில்லை..!

“ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தரையில் அமர்ந்து புரண்டதால் ஊமைக் காயம் ஏற்பட்டது” என்று போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை பொய்யானது என்பதற்கு ஆதாரமாக, ஜெயராஜின் பக்கத்துக் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் நேற்றையதினம் வெளியானது. இப்போது காவல் நிலையம் இரத்தக்களறியாக இருந்திருக்கிறது என்பது போன்ற நீதித்துறை நடுவரின் அறிக்கை நிரூபித்துள்ளது.

இருவரும் “உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்” “மூச்சுத் திணறல் ஏற்பட்டதால்” மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார்கள் என்று முதலமைச்சர் சொன்னதன் பின்னணி இந்த “ரத்தக் களறியை“ மறைக்க தானே..!

குறிப்பாக “காவல் நிலைய மரணம் அல்ல” – இது ஏதோ நீதிமன்ற காவலில் ஏற்பட்ட விவகாரம் என்று திசைதிருப்ப தானே..!

உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகு கூடுதல் டிஎஸ்பி.,யும், டி எஸ்பி.,யும் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியல் வைக்கப்பட்டு – மகாராஜன் என்ற காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட எஸ்பி.,யை கடைசிவரை காப்பாற்ற நினைத்து – இன்று அவரையும் மாற்றியிருக்கிறார்கள்.

உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கினை எடுத்த பிறகுதான் இவை அனைத்தும் நடந்துள்ளதே தவிர – பாதிக்கப்பட்ட ஜெயராஜ் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்ற உணர்வுடன் அதிமுக அரசே தானாகவும் செயல்படவில்லை; பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் போராடிய பிறகும் செய்யவில்லை.

“சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறை அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்” என்று உயர்நீதிமன்றமே மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிட்டது தமிழக காவல் துறை வரலாற்றில் மிகப் பெரியதொரு கரும்புள்ளி..! பிறகு காவல்துறையை முதலமைச்சர் இன்னும் வைத்திருப்பது ஏன்..?

“நீதித்துறை நடுவர் அறிக்கையும், உடற்கூறாய்வு அறிக்கையும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்ய போதிய ஆதாரங்களாக உள்ளன” என்று உயர் நீதிமன்றமே கண்டுபிடித்து சொல்லியுள்ள நிலையில் – துறை அமைச்சராக இருந்த முதலமைச்சர் பழனிசாமி எப்படி அவர்கள் “உடல்நலக்குறைவால் இறந்தார்கள்” என்று மறைத்து, அபாண்டமாக அறிக்கை வெளியிட்டார்..?

ஆகவே, இரட்டை கொலையை மறைக்க சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகளுடன் முதலமைச்சரும் இணைந்து செயல்பட்டார் என்பதை தவிர, இதற்கு வேறு என்ன அர்த்தம்?

இவ்வளவுக்குப் பிறகும், அங்குள்ள சில காவல்துறை அதிகாரிகளின் அராஜகம், வெறியாட்டம் குறித்து உயர்நீதிமன்றம் இவ்வளவு கண்டிப்புடன் உத்தரவுகளை பிறப்பித்த பிறகும், முதலமைச்சர் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. பெண் எஸ்.பி. ஒருவரே பாலியல் புகார் அளித்து – வழக்கு நிலுவையில் உள்ளவரும், முதலமைச்சர் உள்ளிட்ட பல அதிமுக அமைச்சர்களின் ஊழல் புகார்களை திட்டமிட்டு நீர்த்துப் போக வைத்துவருமான முருகன் தென்மண்டல ஐஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி.,கள் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் சிக்கியுள்ள “குட்கா வழக்கில்” விசாரிக்கப்பட்ட ஜெயக்குமாரை, தூத்துக்குடி எஸ்பியாக நியமித்திருக்கிறார். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு உள்நோக்கத்துடன் இதுபோன்ற அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்த முதலமைச்சருக்கு என்ன அக்கறை பாருங்கள்..!

இரட்டை கொலை நடந்த பிறகும் – நேர்மையான திறமையான காவல்துறை அதிகாரிகளை சட்டம் – ஒழுங்கு பணிகளில் நியமிக்க வேண்டும் – பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எள்முனையளவு கூட இல்லாதது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆகவே, காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு காவல் நிலையத்தை நிர்வகிக்க முடியாமல் தோல்வியடைந்த – காவல் நிலையத்தில் நடந்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொலைகளை “உடல்நலக்குறைவால் மரணம்” என்று மனசாட்சி இல்லாமல், உண்மையை வேண்டுமென்றே மறைத்த பழனிச்சாமி தனது முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார். எனவே, அவர் உடனடியாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

“கமிசன்… கரப்ஷன்… கலெக்சன்…” என்பதால், “பதவியை” விட்டுச்செல்ல மனமில்லை என்றால் – குறைந்தபட்சம் காவல்துறையின் பொறுப்பையாவது வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இ.த.ச. 302-இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து உடனே சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்வதோடு – அவர்களுக்கு உதவியாக இருந்து – இந்த இரட்டைக் கொலையை மறைக்கத் துணைபோன அனைவரையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தவறிழைத்தோர் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் – அப்பாவிகளாக காவல் நிலையத்திற்கு வந்து, பிரேதங்களாக அனுப்பப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோரை இழந்துவாடும் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்று தெரிவித்து கொள்கிறேன்.”

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *