அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த சாமியார்

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த சாமியாரை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைதிக்காக உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினர் பலரும் வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து சில மாதங்கள் தங்கிவிட்டு, திரும்பவும் தங்கள் நாட்டுக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும்.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவர் கிரிவலத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.

வீட்டின் முதல் தளத்தில் தனியாக தங்கிருந்த அவரை, சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த முயற்சியை தடுத்து சாமியாருடன் அந்த பெண் போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாமியார், அப்பெண்ணை தாக்க தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் உதவிக்காக கூச்சலிட்டுள்ளார. அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சாமியாரை சரமாரியாக அடித்து உதைத்து அந்த பெண்ணை மீட்டுள்ளனர். மேலும் தலையில் காயமடைந்த அந்தப் பெண்மணியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய அதிகாரிகள், அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த சாமியாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய  விசாரணையில் சாமியார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் மணிகண்டன் என்பதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிவலப் பகுதியில் காவல்துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அந்த பகுதியில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்துள்ள இந்த அவலம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *