சுல்தான்பேட்டையில் மாயமான திருநம்பி கொலையா: அண்ணன், தம்பியை தேடும் காவல்துறை
சுல்தான்பேட்டை அருகே மாயமான திருநம்பி கொலை செய்யப்பட்டிருக்கலாமோ? என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
கோவை மாவட்டம் குலூர் தாலுகா சுல்தான் பேட்டை பகுதியில் பச்சாகவுண்டம் பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தேனியைச் சேர்ந்த கவி(20). இயற்கையில் பெண்ணாக பிறந்திருந்தாலும் திருநம்பியாக இருந்து வருகிறார். இவருக்கு பெற்றோர் இல்லாத நிலையில் மற்றோரு திருநம்பியுடன் வசித்து வந்தார். இவர் மூங்கில்தொழுவு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், அவரது தம்பி ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பணிகளுக்கு சென்று வந்தார்.
கடந்த 2ம் தேதி முதல் கவியை காணவில்லை. இது தொடர்பாக அவருடன் தங்கி இருந்த ஜீவா என்ற திருநம்பி, கடந்த 6ம் தேதி சுல்தான் பேட்டை காவல் நிலயத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சந்திரசேகர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் காவல்துறை முதற்கட்ட விசாரணை நடத்தி இருந்தனர். தொடர்ந்து அடுத்த நாள் விசாரணைக்கு வரச் சொல்லியிருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் மாயமாகிவிட்டனர். திருநம்பி கவியும் காணாமல் போய் 25 நாட்கள் ஆன நிலையில் இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே கவி கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் காவல்துறைக்கு தற்போது எழுந்துள்ளது. சந்திரசேகர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணைக்கு வராமல் மாயமாகியுள்ளதால் அவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாமோ? என்ற சந்தேகமும் உள்ளது. எனவே சந்தேகமும் உள்ளது. எனவே அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சுல்தான்பேட்டை காவல்துறையினர் கூறுகையில், “விரைவில் சந்திரசேகர் மற்றும் அவரது தம்பி ராதாகிருஷ்ணன் பிடிபடுவார்கள் அதன் பின்னர் கவி என்ன ஆனார்? என்பது குறித்து தெரியவரும்” என தெரிவித்தனர்.